சர்ச்சையில் சிக்கிய இந்தியா தூதரக அதிகாரி தேவயானிக்கு விசா மோசடி வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் நேரில் ஆஜரவாதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவும் அவருக்கு அங்கீகாரம் அளித்து உள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றிய இந்திய தூதரக அதிகாரி தேவயானி விசா மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்க அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன் சோதனை என்ற பெயரில் அவமதிக்கவும் செய்தனர்.
இது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிகாரிகளின் நடவடிக்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தேவயானியை பாதுகாப்பதற்காக அவரை ஐ.நா., பிரதிநிதியாக மத்திய அரசு நியமித்தது. ஆனால் தேவயானிக்கு ஐ.நா பிரதிநிதியாக பதவி உயர்வு கொடுக்கப்பட்டாலும் அவர் மீதான விசா மோசடி குற்றச்சாட்டு நீடிக்கும் என அமெரிக்கா அறிவித்தது.
இதற்கிடையே தேவயானி ஐ.நா பிரதிநிதியாக நியமிக்கப்பட்டதற்கு ஐ.நா அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து இந்த பிரச்னையில் சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தியாவும் அமெரிக்காவும் ஈடுபட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக நியூயோர்க் நீதிமன்றில் நடக்கும் தேவயானி மீதான விசா மோசடி வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதிலிருந்து அவருக்கு அமெரிக்க அரசு விலக்கு அளித்துள்ளது.





