விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கிளிநொச்சியில் இராணுவ முகாமை படம்பிடித்த குற்றச்சாட்டில் தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
இவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை நாடு கடத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மகா தமிழ் பிரபாகரன் குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதன்படி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 06.00 மணிக்கு சென்னை நோக்கி பயணித்த விமானத்தில் தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் புலித்தடம் தேடி என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி பின் அதனை புத்தகமாக வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





