இலங்கை அகதிகள் முகாமில் தலையணையால் காதல் மனைவியை அழுத்திக் கொலை செய்த பொலிஸ்காரரின் வெறிச்செயல்!!

794

Police-with-wifeதமிழ்நாடு, தம்மம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாமில் காதல் மனைவி தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து அவரது கணவரான பொலிஸ்காரரை வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது..

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ரமா என்கிற ஞானக்குமாரி (24). இவரை நாகியம்பட்டியை சேர்ந்த மனோஜ்குமார் (28) என்பவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மனோஜ்குமார் காஷ்மீரில் மத்திய ஆயுதப்படையில் பொலிஸாராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இளமாறன் (5), பிரபாகரன் (1) என 2 மகன்கள் உள்ளனர்.

புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கடந்த 30ம் திகதி மனோஜ்குமார் காஷ்மீரில் இருந்து நாகியம்பட்டி அகதிகள் முகாமுக்கு வந்தார். அப்போது மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மனோஜ்குமார் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை மனோஜ்குமார் மீண்டும் நாகியம்பட்டியில் உள்ள அகதிகள் முகாமுக்கு வந்து மனைவி ரமாவிடம் தகராறு செய்தார். அப்போது மகன்கள் இளமாறன், பிரபாகரன் ஆகிய இருவரையும் வெளியில் அனுப்பி விட்டு கதவை பூட்டிக் கொண்டு ரமாவை மனோஜ்குமார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுவன் இளமாறன் தகவல் தெரிவித்ததின் பேரில், அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று மனோஜ்குமாரின் வீட்டுக்கதவை தட்டினார்கள்.

இதைத் தொடர்ந்து கதவை திறந்து வெளியில் வந்த மனோஜ்குமார் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்த போது அங்கு ரமா கட்டிலில் அசைவற்ற நிலையில் கிடந்தார்.

உடனே அவரை மீட்டு தம்மம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை வைத்தியர்கள் பரிசோதனை செய்து விட்டு ரமா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தம்மம்பட்டி பொலிஸ் நிலையத்தில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் புகார் கூறினார்கள். அப்போது பொலிஸார் புகாரை ஏற்று நடவடிக்கை எடுக்க தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் அதிருப்தியடைந்து சுமார் 100 பேர் தம்மம்பட்டி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மனோஜ்குமாரை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டனர்.

பின்னர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உதயகுமார் அகதிகள் முகாமை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் ரமாவை மனோஜ்குமார் தாக்கி தலையணையால் முகத்தை அழுத்திக் கொலை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள மனோஜ்குமாரை பொலிஸார் வலைவீசி தேடி வருகிறார்கள். ரமாவின் உடல் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.