தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இலங்கைப் பிரஜைகள் 6 பேர் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 2 கிலோ 100 கிராம் எடையுள்ள 65 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், இலங்கை, சிங்கப்பூர், துபாய், மலேசியாவில் இருந்து வந்த அனைத்து விமான பயணிகளிடமும் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது கொழும்பு, சிங்கப்பூரில் இருந்து வந்த 4 விமானங்களில் வந்த 6 பயணிகள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் 6 பேருமே இலங்கையை சேர்ந்தவர்கள். சுற்றுலா பயணிகளாக சென்னை வந்திருந்தனர்.
கொழும்பை சேர்ந்த ஹைதரூஸ் (34), 3 பட்டரிகள் பயன்படுத்தும் பெரிய டொர்ச் லைட்டில் பட்டரிகளுக்கு பதிலாக 400 கிராம் தங்க கட்டி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதே விமானத்தில் வந்த கொழும்பை சேர்ந்த காசிம் முகமது (30), மிக்சியின் அடிப்பகுதியில் 500 கிராம் தங்கக்கட்டியை வைத்திருந்தது தெரியவந்தது. அதையும் பறிமுதல் செய்தனர்.
கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் கொழும்பை சேர்ந்த ஹயாத் அலி (29), என்பவரிடம் சோதனை நடத்தியதில் எதுவும் சிக்கவில்லை. அவரை எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது வயிற்றுக்குள் மாத்திரை வடிவத்தில் தங்கம் இருந்தது தெரிந்தது. மருத்துவ குழுவினர் உதவியுடன் எனிமா கொடுத்து அந்த தங்க மாத்திரைகளை வெளியில் எடுத்தனர்.
மொத்தம் 15 தங்க மாத்திரைகள் இருந்தன. ஒன்றின் எடை 20 கிராம் என மொத்தம் 300 கிராம் தங்க மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சசிதரன் (38), ஆசனவாயில் மறைத்து வந்த 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
கொழும்பில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் கண்டி பகுதியை சேர்ந்த முகமது (40), ஹமீது (27) ஆகியோரது சூட்கேசில் தலா 300 கிராம் தங்க பிஸ்கட்டுகள் சிக்கின. அவற்றுக்கு கருப்பு பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. அவற்றையும் பறிமுதல் செய்தனர்.
6 பேரிடம் இருந்தும் 65 லட்சம் மதிப்புடைய 2 கிலோ 100 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் இவர்கள் 6 பேரும் தங்க கடத்தல் கும்பலிடம் குருவியாக செயல்பட்டது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.