திருகோணமலைக்கு கிழக்கு கடற்பரப்பில் உருவாகியிருந்த தாழமுக்க நிலையினால் தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளில் நேற்று முன்தினம் உருவாகியிருந்த பதற்றமான சூழல் இரண்டாவது நாளாகவும் நீடித்துள்ளது.
யாழ்.குடாநாட்டின் பெருங்கடல் பிரதேசங்கள் குறிப்பாக வடமராட்சி கிழக்கு மற்றும் பருத்தித்துறை பிரதேசங்களில் கரையோர கிராமங்களுக்கு கிராமசேவகர்கள் மூலம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடலில் விடப்பட்டிருந்த படகுகள் அனைத்தும் கரைக்கு ஏற்றப்பட்டதுடன் மீனவர்கள் எவரும் கடலுக்குச் செல்லவில்லை.
மேலும் கடல் நேற்றும் மிகவும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கரையை நோக்கி கடல்நீர் பெருமளவுக்கு உள்நுழைந்திருந்ததுடன், உயரமான அலைகளும் ஏற்பட்டிருந்தது.
இதேபோன்றே முல்லைத்தீவு மாவட்டத்திலும் கடல் மிக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் படகுகள் மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டது.
இங்கேயும் கடல் கரையை நோக்கி பெருமளவு உள்வாங்கியிருந்ததாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் இரு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை.
மேலும் யாழ்.மாவட்டத்தில் இடப்பெயர்வுகள் எவையும் இடம்பெற்றிருக்காத நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 15குடும்பங்கள் இடம்பெயர்ந்து, கள்ளப்பாடு கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் தஞ்சம் பெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் அவர்களுக்கு மாவட்டச் செயலகம் ஊடாக உலர் உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவித்திருக்கின்றன.
எனினும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கை, இன்னமும் விலக்கிக் கொள்ளப்படாத நிலையில் தொடர்ச்சியான மழை வடமாகாணத்தில் பெய்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.






