வவுனியா பிரதேசத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் ஊழியர்கள் தாம் பணியாற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முன்னால் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கமைய வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை ஊழியர்கள் நெளுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நேற்று காலை ஆரம்பித்தனர்.
நீண்ட காலமாக தற்காலிக அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதேச சபையில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், சாரதிகள், வேலைப்பகுதி தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் மேலும் பல வருடங்கள் தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த ஊழியாகளுக்கு அவர்களிடம் இருக்கும் கல்வித்தகைமைக்கே நியமனம் வழங்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர்ந்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையில் 19 சுகாதார தொழிலாளர்களும் 7 சாரதிகளும் நிரந்தரமாக்கப்படவேண்டும் எனவும் இவர்கள் தெரிவித்தனர்.
-படங்கள் கலைதேவன்-






