பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதத்தைப் பெற்றதன் மூலம் இலங்கை அணியில் தனது இடத்தை நியாயப்படுத்தியதாக இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இனிங்ஸில் 91 ஓட்டங்களைப் பெற்ற அஞ்சலோ மத்தியூஸ், இரண்டாவது இனிங்ஸில் கடினமான சூழ்நிலையில் ஆட்டமிழக்காமல் 157 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொள்ள அவரது ஆட்டம் பேருதவியாக அமைந்தது.. இந்த 157 ஓட்டங்கள் டெஸ்ட் இனிங்ஸொன்றில் அவர் பெற்ற அதிகமான ஓட்டங்களுமாகும். இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள அஞ்சலோ மத்தியூஸ்,
முதற்போட்டியில் 91, 157 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் அணியில் தனது இடத்தை நியாயப்படுத்தியதாக எண்ணுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை டெஸ்ட் அணியில் அஞ்சலோ மத்தியூஸின் இடம் கேள்விக்குள்ளாகிக் காணப்பட்ட நிலையில், முதற்போட்டியில் தனது சிறப்பான ஆட்டம் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், அணியிலுள்ள 6 துடுப்பாட்ட வீரர்கள் தங்களது கடமைகளை ஆற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசிக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்ட அஞ்சலோ மத்தியூஸ், அதன் காரணமாகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாட வேண்டிய தேவையிருந்ததாகக் குறிப்பிட்டார்.





