அம்மாச்சி உணவகம்

வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை வளாகத்தில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த அம்மாச்சி உணவகம் திறந்த சில மாதங்களேயானா நிலையில் கடந்த மாத (31.10.2019) இறுதியுடன் நிரந்தமாக மூடப்பட்டதுடன் வேறொரு தனிநபர் ஒருவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு புதிய பெயரில் தற்போது இயங்கி வருகின்றது.

வடக்கின் பாரம்பரிய உணவகம் என்ற நாமத்தினை கொண்ட அம்மாச்சி உணவகம் இவ்வாறு மூடப்பட்டமை மன வேதனையளிக்கும் செயலாக அமைந்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதி பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் எம்.மகேந்திரனிடம் கேட்டபோது,

எமது வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அமைந்திருந்த அம்மாச்சி உணவகத்தில் வருமானம் குறைவாக காணப்படுகின்றது என தெரிவித்தே அவர்கள் ஒப்பந்தத்தினை நீக்கினார்கள் என தெரிவித்தார்.

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் கடமையாற்றுவதுடன் பணிமனைக்கு அருகே காணப்படும் தாதிய கல்லூரி மாணவர்களுக்கும் இவ் அம்மாச்சி உணவகமே அருகாமையில் காணப்படுகின்றது.

எனவே தினசரி 100 க்கு மேற்பட்டவர்கள் செல்லும் அம்மாச்சி உணவகத்திற்கு எவ்வாறு வருமானம் குறைவாக காணப்படும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.





