சிட்னி பாலத்திலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்ற ஒருவரை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான மட் பிரியர் மற்றும் ஸ்டுவட் பிராட் ஆகியோர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
இங்கிலாந்து அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்து வீரர்களின் இந்த துணிகர செயல் குறித்து இங்கிலாந்து பத்திரிக்கைகள் பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவில் நடந்த ஆசஷ் டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து அணி அங்கு சென்றிருந்தது.
தொடரை மோசமான முறையில் இங்கிலாந்து இழந்து விட்டது. அடுத்து ஒரு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. புகழ் பெற்ற சிட்னி பாலத்துக்கு அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில்தான் இங்கிலாந்து வீரர்கள் தங்கியுள்ளனர்.
இந்தநிலையில் புதன்கிழமை இங்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள டார்லிங் துறைமுகத்தில் உள்ள சிட்னி பாலத்தின் நுனியில் ஒரு நபர் நிற்பதைப் பிரியரும், பிராட்டும் பார்த்தனர்.
அவர் தற்கொலைக்கு முயல்வது அவர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்து வேகமாக அங்கு விரைந்து சென்றனர். அந்த நபரை நெருங்கி தடுத்து நிறுத்தினர். பின்னர் அவரை ஆசுவாசப்படுத்தி அவரிடம் என்ன நடந்தது, ஏன் இந்த முடிவு என்று பேச ஆரம்பித்தனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாலத்தில் நின்றபடியே அவருடன் பேசி அவரை அமைதிப்படுத்தினர் இரு கிரிக்கெட் வீரர்களும். இது குறித்து பிரியர் கூறுகையில், யாராக இருந்தாலும் ஒருவரின் மரணத்தைக் காண விரும்ப மாட்டார்கள். அதேபோலத்தான் நாங்களும். சாதாரணமாக யாரும் செய்யும் காரியத்தைத்தான் நாங்களும் செய்தோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில் அந்த நபரை மீட்டு, அவரை சகஜப்படுத்திய பின்னர் அவர் இயல்பாக திரும்பிச் சென்ற சந்தோஷத்தில் நானும் பிராட்டும் பாருக்குப் போனோம் என்றார் சிரித்தபடி.
இதற்கிடையே தற்கொலைக்கு முயற்சித்த நபர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தற்கொலை முடிவுடன் வந்த அவர் தனது கையடக்கத் தொலைபேசி, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை தண்ணீரில் தூக்கிப் போட்டு விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





