
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது
இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெற்று வருகின்றது. அதில் அரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்தது.
இந்நிலையில் இரு அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 8 ஆம் திகதி டுபாயில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பாகிஸ்தான் அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அந்த வகையில் முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 63.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இனிங்சில் 388 ஓட்டங்களை பெற்று 223 ஓட்டங்களால் முன்னிலை வகித்தது.
இதனையடுத்து 2 ஆவது இனிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி தனது சகல விக்கெட்டுகளையும் இழந்து 359 ஓட்டங்களை பெற்று இலங்கை அணிக்கு 137 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.
137 என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக திமுது கருணாரத்ன மற்றும் கௌசல் சில்வா ஆகியோர் களமிறங்கி நிதானமாக துடுப்பெடுத்தாடி இருவரும் அரைச்சதங்களை கடந்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
கௌசல் சில்வா 58 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க கருணாரத்ன 62 ஓட்டங்களுடனும் குமார் சங்கக்கார 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்திலிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக மஹேல ஜயவர்தன தெரிவு செய்யப்பட்டார்.





