வவுனியா உட்பட பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை : கனமழைக்கு வாய்ப்பு!!

741

சிவப்பு எச்சரிக்கை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில இடங்களில் 150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் (காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில்) மாத்தளை, கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 – 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசந்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளின் சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசந்துறை, மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக நீர்கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் பல மாவட்டங்களுக்கும் இன்று காலை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.