தை மாத ராசி பலன்கள் – கடகம்!!

351

katakam

மரத்தடியில் பிறந்தாலும் மாநிலத்தை ஆள நினைப்பவர்களே, முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபித்துக் காட்டுபவர்களே, குழுவாக செயல்படுவதை விரும்புபவர்களே சூரியனும், புதனும் உங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக்கும். சுக்கிரன் வக்ரமாகி உங்களுடைய ராசிக்கு 6ம் வீட்டில் நிற்பதால் குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4ம் வீட்டில் பாவ கிரகங்கள் அமர்ந்திருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாகும். வாழ்க்கையே பெரிய போராட்டமாக இருப்பதாக அவ்வப்போது நினைத்துக் கொள்வீர்கள். கவலைப்படாதீர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாய் 3ம் வீட்டில் நிற்பதாலும் சாதகமான நட்சத்திரத்தில் செல்வதாலும் பிரச்னைகளை கடக்க நல்ல வழி கிடைக்கும். உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் 12ம் வீட்டில் மறைந்திருப்பதால் புகழ்பெற்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவதன் மூலமாக ஆழ்மனதில் ஒரு அமைதி நிலவும்.

பிள்ளைகள் சில நேரங்களில் பொறுப்பாகவும், சில சமயங்களில் எரிச்சலூட்டும் வகையிலும் செயல்படுவார்கள். நீங்கள் நடுநிலையாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகளே உங்கள் குடும்ப பிரச்னைகள் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாத வகையில் அதை தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். கட்சியில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். தொகுதி மக்களை பணிவாக அணுகுங்கள்.

மாணவர்களே கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் கடைசி வரிசையில் உட்கார வேண்டாம்.
சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள். தேர்வு நெருங்குகிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கன்னிப் பெண்களே கல்யாணம் கூடி வரும். காதல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுங்கள். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது. பெட்ரோல் -கெமிக்கல், உணவு வகைகள் ஆதாயம் தரும். பழைய கடன்களை போராடி வசூலிக்க வேண்டி வரும். உத்யோகத்தில் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். உங்களுடைய திறமை மீது அதிகாரி நம்பிக்கை வைப்பார். இடமாற்றம் சாதகமாக இருக்கும்.

விவசாயிகளே பணப்பயிர் மூலமாக ஆதாயமடைவீர்கள். பழுதாகிக் கிடந்த நீர்ப் பம்பை மாற்றுவீர்கள். கலைத்துறையினரே சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளை தரப் பாருங்கள். விரைந்து செயல்படுவதால் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான  திகதிகள்:
ஜனவரி : 19, 20, 21, 22, 24, 28, 29, 30
பெப்ரவரி : 6, 9.

ந்திராஷ்டம தினங்கள் : பெப்ரவரி 1, 2 ஆகிய திகதிகளில் எதிலும் முன்யோசனையுடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம் : அம்மனை வெள்ளிக் கிழமையன்று தரிசியுங்கள். தாயை இழந்த பிள்ளைக்கு உதவுங்கள்.