தை மாத ராசி பலன்கள் – தனுசு!!

568

thanusu

பூவைப்போல் புன்சிரிப்பும் மெல்லிய மனதும் கொண்ட நீங்கள் சில நேரங்களில் புயலாக சீறிப் பாய்ந்து புரட்சி செய்வீர்கள். ஒற்றுமையே உயர்வு தரும் என்பதை உணர்த்துவீர்கள். ராஜதந்திரிகளான நீங்கள் சமயோஜித புத்தியால் சாதிப்பவர்கள். கடந்த ஒருமாத காலமாக உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்திருந்த சூரியன் இப்போது உங்கள் ராசியை விட்டு விலகியதால் முன்கோபம் விலகும். அவசரப்பட்டு கடுமையாகப் பேசினீர்களே இனி சாந்தமாவீர்கள்.

ஆனாலும் சூரியன் 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கண்வலி வந்து நீங்கும். இருசக்கர வாகனத்தை இயக்கும்போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். 2ம் வீட்டில் அமர்ந்திருந்த சுக்கிரன் வக்ரமாகி உங்கள் ராசிக்குள் அமர்ந்திருப்பதால் அழகு, இளமை கூடும். உங்களுடைய ராசிநாதனான குரு ராசியைப் பார்ப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 10ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் சமூதாயத்தில் அந்தஸ்து உயரும். குழந்தை இல்லையே என வருந்தியவர்களுக்கு பிள்ளை பாக்யம் கிடைக்கும். வேலைதேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.

முன்பணம் கொடுத்து முடிக்கப்படாமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திர பதிவு செய்வீர்கள். அரசியல்வாதிகள் வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டு மற்றும் கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். சக மாணவர்கள் மதிப்பார்கள். கன்னிப் பெண்கள் உங்களின் நட்பு வட்டம் விரியும். வேலை கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வாழ்க்கைத்துணையும் அமையும். பெற்றோரின் பேரன்பில் மகிழ்வீர்கள்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள். புது முதலீடு செய்வீர்கள். புது ஒப்பந்தங்களும் வரும். பழைய நிறுவனங்களை காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களுடன் இருந்து வந்த முரண்பாடு நீங்கும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள்.

சனியும், ராகுவும் சாதகமாக இருப்பதால் சந்தையில் மதிக்கப்படுவீர்கள். வியாபார சங்கத்தில் பதவிகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்களுடைய ஆளுமைத்திறன் பாராட்டி பேசப்படும். உங்களின் கடின உழைப்பை மூத்த அதிகாரிகள் உணர்வார்கள். புது பொறுப்புக்கும், பதவிக்கும் உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். கலைத்துறையினர் சின்னச் சின்ன வாய்ப்புகளை கடந்து இப்போது பெரிய வாய்ப்புகளும் வரும். பிரபல கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். விவசாயிகள் தண்ணீர் பிரச்னை தீரும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். பொறுமையோடு சாதிக்கும் மாதமிது.

ராசியான திகதிகள்:
ஜனவரி : 14, 15, 21, 22, 23, 24
பெப்ரவரி : 1, 2, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள் : ஜனவரி 16, 17, 18ம் திகதி மாலை 6 மணி வரை மற்றும் பெப்ரவரி 12ம் திகதி மதியம் 2 மணி முதல் பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள். ஆரம்பக் கல்வி போதித்த ஆசிரியருக்கு உதவுங்கள்.