தைப் பொங்கல் விழாவின் தனித் தன்மைகள்!!

1198

PPP

தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப்பெரும் விழா தைப் பொங்கல் விழா. இவ்விழாவின் தனித் தன்மைகள் சிலவற்றைக் இக்கட்டுரையில் காண்போம்.

சமயங்கள் கடந்த விழா..

பொதுவாக இந்து சமயச் சார்புடைய விழாக்கள் நட்சத்திரம் அல்லது திதி அடிப்படையில் அமையும். தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் முதலியவை நட்சத்திரம் அடிப்படையில் அமைந்த விழாக்கள். கந்த சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, தீபாவளி முதலியவை திதி அடிப்படையில் அமைந்த விழாக்கள். சமயச்சான்றோர்களின் பிறந்த நாளும் விழாவாகக் கொண்டாடப்படும்.

கிறிஸ்மஸ், ராம நவமி, கோகுலாஷ்டமி, ஆழ்வர்களின் திருநட்சத்திரம், நபிகள் நாயகம் பிறந்த நாள் முதலியவை இவ்வகையில் அமையும். வைகாசி விசாகம் புத்தர் ஞானம் பெற்ற நாள். ஆனால் தைப் பொங்கல் கொண்டாடப்படும் தை முதல் நாளோ இந்த அடிப்படையில் அமையவில்லை. நட் சத்திரம் அல்லது திதி அடிப்படையில் அமையும் விழா நாள்கள் அந்த அந்த ஆண்டுப் பஞ்சாங்கப்படி நிர்ணயிக்கப்படும்.

சிலவேளை மாறி வரவும் வாய்ப்புண்டு. ஆனால் பொங்கல் நாள் எப்போதும் மாறாது தை முதல் நாள் தான் வரும். மேலும் சமயத் தொடர்பான விழாக்களுக்கு ஏதேனும் புராணக் கதைத் தொடர்பு இருக்கும். தீபாவளி என்றால் நரகாசுரன் கதையும். கந்த சஷ்டி என்றால் சூரசம்காரக் கதையும் உள்ளன. ஆனால் தைப் பொங்கலுக் கென்று எந்தப் புராணக் கதையும் இல்லை.

எனவே தைப் பொங்கல் விழா ஒரு சமயச் சார்பற்ற விழா எனக் கூறலாம். தமிழர்களின் முதன்மை உணவு அரிசிச் சோறு ஆகும். எனவே தமிழர்களில் பெரும்பாலோர் வேளாண்மையைத் தம் தொழிலாகக் கொண்டவர்கள். வயல்களில் உழுது பயிரிட்டு வாழ்பவர்கள். அவர்கள் தாங்கள் ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் கதிரவனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். பொங்கல் என்னும் இந்தப் புத்தரிசிச் சோற்றுணவை மையமாக வைத்தே இந்த விழாவுக்குப் பொங்கல் என்னும் பெயர் வந்தது. பானையில் பால் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி ஆரவாரத் துடன் பொங்கல் நாளை வரவேற்பது தமிழர் மரபாகும்.

தை முதல் நாளின் சிறப்பு

தை முதல் நாளில் சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறிப் பயணம் செய்கிறான். அதாவது பூமத்திய ரேகையின் தென் பகுதியிலிருந்து வடபகுதிக்கு ஞாயிறு செல்லும் நாளே தை முதல் நாள். இதனை உத்தராயணம் என்பர். மகர சங்கராந்தி என்றும் அழைப்பர். எனவே இந்த நாளைத் தேர்ந்தெடுத்து ஞாயிற்றுக்குப் புதுப் பொங்கலைப் படைக்கும் விழாவைக் கொண்டாடினார்கள். ஞாயிறு – சூரியன் – தானே நமக்கு வெம்மையும் வெளிச்சமும் தருகிறது. சூரியனை முதன்மைக் கோளாகக் கொண்டு தானே ஏனைய கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன. சிலப்பதிகாரம் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று சூரியனை வாழ்த்தியே தொடங்குகிறது.

தைத் திங்களின் தலைமைத் தன்மை..

தைத் திங்களே தலைமைத் திங்கள் என்னும் தலைப்பில் காலம்சென்ற மொழியியல் பேரறிஞர் ச.அகத்திய லிங்கனார் விடுதலை இதழில் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். தமிழில் காணப்படும் மாதங்களில் பண்டைக் கால இலக்கியங்களில் அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியங்களில் தை மாதம் ஒன்றே மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ நாற்பதுக்கும் அதிகமான இடங்கள் தை என்ற சொல்லைப் பெயராகவும் வினையாகவும் (தைஇ எனும் அள பெடை நிலையில்) பயன்படுத்தியுள்ளமை காணலாம்.

இது மிகப் பண்டைக் காலம் முதலே தை என்ற சொல் தமிழ்ச் சொல்லாகப் பல்வேறு நிலையில் பயன்பட்டுள்ளமையைக் காட்டும். மீதியுள்ள திங்கட்பெயர்கள் தமிழ்ச்சொல்லாக இலது காணத்தக்கது. இலங்கையின் தட்ப வெட்ப நிலையில் மார்கழிப் பனி, குளிர் நீங்கித் தை வந்ததும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தை மாதம் வளம் கொழிக்கும் ஒரு மாதம் என்றும் சங்க இலக்கியமாகிய புறநானூறு பேசுகிறது.
உழவர் பெருமை உணர்த்தும் விழா..

உலகிலுள்ள தொழில்களிலே உழவுத் தொழிலே சிறந்ததாகும். எனவேதான் திருவள்ளுவர் தம் திருக்குறளில் உழவு என்னும் ஓரதிகாரம் வகுத்து உழவின் பெருமையை நமக்கு உணர்த்துகிறார். “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை” என்னும் குறள் உலகம் சோறு தரும் ஏர் வழியே செல்லத் தக்கது. ஆதலால் உழவுத் தொழிலே தலை சிறந்தது என்னும் கருத்தைக் கூறுகிறது.

உலகத்தவர் களுக்கெல்லாம் உணவூட்டும் தன்மையுடைய உழவுத் தொழிலைச் செய்கின்ற உழவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்றும்,”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்” என்றும் திருவள்ளுவர் உழவர்களைப் போற்றுகிறார். உழவர்களையும் அவர்களது உழவுத் தொழிலையும் தமிழர்கள் மிகச் சிறந்த தொழிலாகப் போற்றி வந்தார்கள்.

இப்பண்பு தமிழினத்தின் தனித் தன்மையாகும். இன்று கிடைக்கும் தமிழ் நூல்களில் பழைமையானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்திலேயே வேளாண்முல்லை, ஏரோர்களவழி என்றும் புறத்திணைத் துறைகளில் உழவர் பெருமை பேசப்படுவதைப் பார்க்கலாம். சங்கப் புலவர்களில் ஒருவர் பெயரே ஓரேருழவர் ஆகும். கவிச் சக்கரவர்த்தி கம்பர் ஏர் எழுபது எனும் நூல் வழி உழவர் பெருமையைப் பாடுகிறார். மேழிச் செல்வம் கோழை படாது என்னும் முதுமொழியும் உழவர் உயர்வை உணர்த்தும்.

பிற்காலத்தில் எழுந்த பள்ளு நூல்கள் உழவர் சிறப்பை உரைக்க எழுந்தவையே. பாரதியாரும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடுகிறார். மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோராவர் என்பது மணிமேகலை.

இத்தகைய உழவர் பெருமையை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற விழாவே பொங்கல் விழாவாகும். உழவு என்பது உழைத்தல், உழைப்பு என்னும் சொற்களுடன் தொடர்புடைய ஒன்றாகும். மெய்வருத்தல், பாடுபடுதல் என் பது இதன் பொருள். எனவே பொதுவாக உழைப்பின் உயர்வைப் பாராட் டும் விழாவாகவும் இதனைக் கருதலாம். இக்காலத் தொழிலாளர் தினத்துடன் இதனை ஒப்பிட்டு நோக்கலாம்.

நன்றி தெரிவிக்கும் நல்விழா..

நன்றி மறப்பது நன்றன்று, செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய் வில்லை இவை வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகள். எனவே உழவர்கள் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மழை, ஞாயிறு, மாடு ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தைப் பொங்கல் விழாவை மூன்று நாள்கள் கொண்டாடுகின்றனர்.

தைப் பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பொங்கல் நாள் எனப்படும். இது போக்கி என்பதன் திரிபாகும். பழைய பொருள்களைக் கழித்து (போக்கி) புதிய பொருள்களை – புத்தாடை, புதுப்பானை, புதுவண்ணம் முதலியவற்றை கொள்ளும் நாளே போக்கி நாளாகும்.

இந்த நாளை மழைக்குப் பொங்கல் படைக்கும் நாளாகக் கொண்டாடினார்கள். மழையை வணங்கும் மரபைச் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று வாழ்த்துவதன் வாயிலாக அறியலாம். மேலும் அந் நூல் மழைத் தெய்வமாகிய இந்திரனுக்கு விழா எடுத்துப் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என வாழ்த்துவது பற்றியும் பேசுகிறது.

திருவள்ளுவரும் மழையின் தேவையை வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த நிலையில் வைத்துப் பேசுகிறார். மக்கள் உயிர் வாழ உணவுடன் நீரும் இன்றியமையாத பொருளல்லவா? விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது என்பது குறள். பயிர்த் தொழிலின் உயிரே மழை தானே! அதற்கு மக்கள், சிறப்பாக உழவர்கள் நன்றி செலுத்துவது முறை தானே? தைப் பொங்கல் நாளன்று தமிழர்கள் உழவுக்கு உதவும் கதிரவனுக்குப் பொங்கல் படைத்து மகிழ்ந்தனர். மழைதரும் மேகம் உருவாவதற்குக் காரணம் கதிரவன் தரும் வெம்மை தானே. வெளிச்சம் தரும் கதிரவன் இல்லாவிடில் உலகமே இருட்டில் மூழ்கிவிடுமே, உயிர்கள் அனைத்தும் கண்ணிருந்தும் குருடாகிவிடுமன்றோ?

தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் நாள். உழவுத் தொழிலின் அடிப்படையான நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும், வண்டி இழுப்பதற்கும் உதவும் எருதுகளையும், வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்களையும் அழகுபடுத்திப் பொங்கல் ஊட்டி நன்றி தெரிவிக்கும் நாளாக இது அமைகிறது. மாடு என்றாலே செல்வம் எனக் கருதியவர்கள் தமிழர்கள். கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்னும் திருக்குறள் இதனை உணர்த்தும்.

இவ்வாறு மழை, சூரியன், மாடு ஆகியவற்றிற்கு; நன்றி செலுத்தும் நல்விழாவே பொங்கல் விழாவாகும். மேலை நாடுகளில் இப்போதுதானே நன்றி தெரிவிக்கும் நாள் (Thanks giving day) கொண்டாடுகிறார்கள். பொங்கல் விழாவின் நான்காம் நாள் காணும் பொங்கல் என்று இளைஞர்களும் குடும்பத்தினரும் ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்வார்கள். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஒருவர் ஒருவரைக் கண்டு வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள் வார்கள்.

நிலவுடைமையாளர்கள் உழவுத் தொழில் செய்வோர்க்கு அன்பளிப்புகள் கொடுப்பது வழக்கம். சில பகுதிகளில் கொப்பி கொட்டுதல் என்றோர் பழக்கம் உள்ளது. ஓரூரைச் சேர்ந்த பெண் மக்கள் – இளைய மகளிர் – ஓரிடத்தில் ஏற்றத் தாழ்வின்றிக் கூடி ஆடிப்பாடி உண்டு மகிழ்வர். இவ்வாறு பொங்கல் விழா உறவை மேம்படுத்தும் ஓர் ஒற்றுமைத் திருவிழாவாகவும் விளங்குகிறது.

பொங்கல் விழாவை ஒட்டி இளையர்கள் காளை மாடுகளைப் பிடித்து அடக்கும் மஞ்சுவிரட்டு என் னும் வீர விளையாட்டு தமிழகத்தின் தென்பகுதியில் நடைபெறும். இவ் விளையாட்டு சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனக் குறிக்கப்படுகிறது. கலித்தொகையில் முல்லைக் கலிப்பகுதி இது பற்றி விளக்கமாகப் பேசுகிறது. இடைக் குலத்தினர் தம் பெண் பிள்ளைகளுடன் எருதுகளையும் வளர்த்து வருவதும் அவற்றை அடக்கும் காளையர்க்கு அவர்களை மணமுடிப்பதும் மரபாக இருந்ததை முல்லைக்கலி நமக்குக் கூறுகிறது.

திருவள்ளுவர் நாள்..

தமிழர்கள் உலகுக்கு வழங்கிய நன்கொடைகளில் தலைசிறந்தது திருக்குறளாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டுவார் பாரதியார். இத்தகைய திருவள்ளுவரை நினைவுகூரும் நாளாகத் தமிழ்நாடு அரசு தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை அறிவித்துள்ளது. அன்று அரசின் சார்பில் தமிழ் அறிஞர் களுக்குத் திருவள்ளுவர், பெரியார், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய சான்றோர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங்களுக்குரிய பரிசுகளும் தரப்படுகின்றன.

இதனால் பொங்கல் விழா தமிழ் மொழி தழைக்க உதவும் விழாவாகவும் மிளிர்கிறது. 2009 ஆம் ஆண்டுமுதல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் எனத் தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இதுவே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாளாகவும் கருதப்படுகிறது.

இதுவரை தமிழ்ப் புத்தாண்டு எனக் கருதப்பட்டு வந்த ஏப்ரல் 14/15 இல்- சித்திரை முதல் நாளில் தொடங்கும் ஆண்டுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை என்பதும் அவற்றின் தோற்றம் பற்றிய கதை போற்றத்தக்கதாக இல்லை என்பதும் நோக்கத்தக்கவை.

தமிழர்கள் கொண்டாடும் இந்தப் பொங்கல் விழா தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் கொண்டாடப் படுவதைக் காணமுடிகிறது. தாய்லாந்தில் சோங்கரான் என்னும் பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப் படுகிறது. தமிழர்கள் போகி நாளில் செய்வதைப் போல இவ்விழாவின் முதல் நாள் அன்று பழம் பொருள்களைக் கொளுத்துவது இங்கும் உண்டு. சோங்கரான் என்பது சங்கராந்தி என்பதன் திரிபு எனக் கொள்ள இடமுண்டு. ஜப்பானில் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது.

ஆங்கிலப் புத் தாண்டு நடைமுறைக்கு வந்த போது இந்தப் பழைய மரபு சிறிய புத்தாண்டு KOSHOGATSU என மருவி அழைக்கப்பட்டது. தமிழரது தைப் பொங்கல் நடை முறையை ஜப்பானியருடைய புத்தாண்டு நடை முறையுடன் ஒப்பிட்டு நோக்கிய ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ பின்வரும் ஒற்றுமைக் கூறுகளைக் கூறுகிறார். தை மாதம் 14 ஆம் நாள் பழைய பொருள்களை எரித்தல், புதிய குடில்கள் மாடுகளுக்கு அமைத்தல், தை 15 ஆம் நாள் மாவிலைத் தோரணம் போலக் காகிதத் தோரணம் கட்டல், புது நீர் எடுத்தல், பயறு சேர்த்துப் பச்சரிசிப் பொங்கல் செய்தல், தெய்வத்திற்கு மடையிடல், மாடுகளை அடக்கிப் பிடித்தல், 16 ஆம் நாள் மாட்டுப் பொங்கல் படைத்தல், பணியாளர்க்குக் கொடை கொடுத்தல், தமிழர் உறவினைரைக் காணல் போல் ஜப்பானியர் கல்லறை சென்று வணங்குதல் முதலியவை அவர் காட்டும் பண்புகளாகும். பால் பொங்கும்போது தமிழர்கள் பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது போல ஜப்பானியரும் HONGA HONGA என ஒலி எழுப்பி வாழ்த்துவதையும் அவர் சுட்டுகிறார். இத்தொடருக்கு பொலிக பொலிக என்பது பொருளாம்.

நம்பிக்கை நன்னாள்..

தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் பழமொழி தைப் பொங்கல் விழா நாள் தமிழர் இல்லங்களில் திருமணம் போன்ற மங்கல நிழ்ச்சிகள் நடக்க வழி வகுக்கும் நம்பிக்கை நாள் என்பதையும் தெரிவிக்கிறது. சமயச் சார்பற்ற இத் தைப் பொங்கல் விழா பெயர்ச் சிறப்பும், காலச் சிறப்பும் கொண்ட பெருவிழா, உழவர் பெருமை உணர்த்தும் அறு வடைத் திருவிழா, நன்றி உணர்வை வெளிப்படுத்தும் நல்விழா, உறவை வலிமையாக்கும் ஒற்றுமை விழா, வீர விளையாட்டுக்குரிய வெற்றி விழா, திருவள்ளுவரை நினைத்துத் தமிழைப் போற்றும் தகைமை மிக்க விழா, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க விழா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஒளிவீசும் விழா என்று கூறத்தக்க தனித்தன்மைகளைக் கொண்டு விளங்குகிறது. தமிழர்க்குரிய அடையாளமாக விளங்கும் விழாவே தைப்பொங்கல் விழா வாகும். எனவே இதனைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோமா.

அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்..