
சம்பள உயர்வு கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, விரைவில் ஒப்பந்த வீரர்களின் பட்டியலை வெளியிட உள்ளது.
இந்நிலையில் 35 சதவிகித சம்பள உயர்வு கோரி வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பாகிஸ்தான் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் தலைமையில் சில மூத்த வீரர்கள் சபைத் தலைவர் நஜம் சேத்தியை சமீபத்தில் சந்தித்து ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்தனர்.
சந்திப்பின்போது மிஸ்பா கூறுகையில் சமீப காலமாக வீரர்களுக்கு முறையாக ஊதியம் தரப்படுவதில்லை. அனைத்து நாட்டு கிரிக்கெட் சபைகளும் நல்ல சம்பளம் தருகிறார்கள், நமது வீரர்களுக்குத்தான் சரியான சம்பளம் தரப்படுவதில்லை.
எனவே நமது வீரர்களுக்கு 30 முதல் 35 சதவிகித ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்போம் என நஜம் சேத்தி உறுதியளித்துள்ளார்.





