தெற்கு சூடானில் போராட்டத்திற்கு பயந்து தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு சூடானின் முன்னாள் துணைப் பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார். இரு தரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பிற ஆபிரிக்க நாட்டுத் தலைவர்களும், ஐ.நா குழுவினரும் தொடர்ந்து முயன்று வருகின்றனர். ஆயினும், இவர்களுக்கிடையேயான சண்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
கடந்தவாரம் போராட்டக்காரர்கள் வசம் இருந்த பெண்டியு, போர் போன்ற நகரங்களை மீண்டும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த அரசுத்துருப்புகள் மலக்கல் பகுதியிலும் தங்கள் அதிகாரத்தினை நிலைநிறுத்தினர்.
இந்தப் பகுதியில் இன்று மீண்டும் இரு தரப்பினருக்கிடையேயும் கடுமையான சண்டை தொடங்கியது. இந்த தாக்குதல்களில் இருந்து தப்பிக்க நினைத்த குழந்தைகள், பெண்கள் அடங்கிய 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒரு படகில் ஏறி வெள்ளை நைல் நதி வழியாக தப்பிக்க முயன்றனர்.
அப்போது பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்ததில் அனைவருமே மூழ்கிவிட்டதாக இராணுவத்தின் தகவல் தொடர்பாளர் பிலிப் ஆகர் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து சென்ற அதிகாரிகள், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.