இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
முதலிரண்டு போட்டியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா 2–0 என முன்னிலை வகித்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டி சிட்னியில் நேற்று நடந்தது, இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் அணித்தலைவர் அலெஸ்டர் குக் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இதனையடுத்து களமிறங்கிய அணித்தலைவர் குக்(35), இயான் பெல்(29) ஜோடி சுமாரான தொடக்கம் கொடுத்தது. பென் ஸ்டோக்ஸ்(15), கேரி பேலன்ஸ்(26), ரவி போபரா(21) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய மார்கன் ஒருநாள் போட்டியில் தனது 21வது அரைசதத்தை பதிவு செய்து, 54 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்தவர்கள் ஏமாற்றவே 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 243 ஓட்டங்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை விரட்டிய அவுஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச்(22) பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. பின் இணைந்த டேவிட் வார்னர், ஷான் மார்ஷ் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை பதம்பார்த்தது.
அபாரமாக ஆடிய வார்னர், ஒருநாள் போட்டியில் 8வது அரைசதம் அடித்தார். மறுமுனையில் மார்ஷ், 10வது அரைசதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த போது வார்னர்(71) ஆட்டமிழந்தார், பின் வந்த அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்(34) ஓரளவு நம்பிக்கை தந்தார்.
பின் இணைந்த மார்ஷ், பிராட் ஹாடின் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. அவுஸ்திரேலிய அணி 40 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 244 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது, ஆட்டநாயகன் விருதை அவுஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் வென்றார்.
இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி தொடரை வென்றது.





