வவுனியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் சாதித்த வீரர்களுக்கு கௌரவிப்பு!!

804

சாதித்த வீரர்களுக்கு கௌரவிப்பு

வடமாகாண குத்துச்சண்டை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் தலைமையில் இன்று (29.01) நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ்கலவன் பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் மாணவன் ஆர்.கெ.கெவின் (11) உட்பட ஏழு வீரர்களும் பாடசாலையின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் பாடசாலை சமூகத்தால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வை தொடர்ந்து வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தின் மாணவன் க.நிரோஜன் (தங்கப்பதக்கம்) கல்லூரியின் அதிபர் எஸ்.சிவநாதன் தலைமையில் கௌரவிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துசேனவை சந்தித்த கிக் பொக்சிங் வீரர்கள் அவரின் ஆசிகளை பெற்றுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசனை சந்தித்த வீரர்கள் அவருடன் அளவளாவியிருந்தனர்.

இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23.01.2020 தொடக்கம் 26.01.2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்ட,

வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு ஐந்து தங்கப்பதக்கங்களையும், இரண்டு வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கிக் பொக்சிங் குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளரும், வடக்கு மாகாண ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவருமான எஸ்.நந்தகுமாரினால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்களான,

வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (18) தங்கப்பதக்கத்தையும், பி.ராகுல் (17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (18) தங்கப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (11) தங்கப்பதக்கத்தையும்,

வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் கெ.நிரோஜன் (16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன் (17) என்ற மாணவன் வெள்ளி பதக்கத்தையும், வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.ஸ்ரீதர்சன் (18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும்,

தென்னிலங்கையை சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமா 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாகிஸ்தானுக்கு பயணமாகியிருந்தனர்.

இவ்வீரர்கள் இலங்கைக்கு 13 தங்கப்பதக்கங்களையும் 06 வெள்ளிப்பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.