இந்திய கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாகும் லொஸ்லியா!!

635

லொஸ்லியா

தமிழ் திரையுலகில் நடிகராக கால்பதித்திருக்கும் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான லொஸ்லியா நடிக்க உள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாட ஆரம்பித்ததில் இருந்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் மொழியில் அதிகமாக பதிவுகளை வெளியிட ஆரம்பித்தார்.

இதனால் அவருக்கு அதிகமான தமிழ் ரசிகர்கள் உருவெடுத்தனர். இதனையடுத்து அவர் நடிகர் சந்தானம் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகி வரும் `டிக்கிலோனா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

அதனை தொடர்ந்து தற்போது ‘பிரண்ட்ஷிப்’ என்கிற படத்தில் கதாநாயனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனை `அக்னிதேவி’, `சென்னையில் ஒருநாள் 2′ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்கள் ஜான்பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த லொஸ்லியா நடிக்க உள்ளதாக படக்குழு சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதேபோல நெடுஞ்சாலை படத்தின் மூலம் பிரபலமான ஆரி நடிப்பில், உருவாகவிருக்கும் படத்திலும் லொஸ்லியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.