நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 15 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளதோடு, ஒருநாள் தரவரிசையில் இதுவரை விகித்து வந்த முதலிடத்தையும் இழந்தது.
நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது.
இதில் முதலாவதாக இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது.
இந்தநிலையில் இரு அணிகளும் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
போட்டியின் 17 ஓவர் முடிவில் லேசான மழை குறுக்கிட்ட காரணத்தினால் 5 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. நியூசிலாந்து அணி 33.2 ஓவரில் 2 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதையடுத்து போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக ஆடி வில்லியம்சன் 77 ஓட்டங்களை விளாசினார், ஒருநாள் அரங்கில் அவர் தனது 8வது அரைசதத்தை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோஸ் டெய்லர் (57) அரைசதம் கடந்து வெளியேறினார். கடைசி நேரத்தில், அதிரடியாக ஓட்டங்களை சேர்த்த கோரி அண்டர்சன் 17 பந்துகளில் 44 ஓட்டங்களை விளாச, நியூசிலாந்து அணி 42 ஒவர்களில், 7 விக்கெட்டுக்களை இழந்து 271 ஓட்டங்களைக் குவித்தது. இந்தியா சார்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதையடுத்து இந்திய அணிக்கு ‘டக்வர்த்-– லூவிஸ்’ முறைப்படி 297 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கோலி மற்றும் அணித் தலைவர் தோனி ஆகியோர் மட்டுமே ஓரளவு கைகொடுத்தனர்.
கோலி 78 ஓட்டங்களையும் தோனி 56 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் வெளியேற, ஏனைய வீரர்கள் எவரும் அரைசதம் கூட பெறாது வரிசையான வெளியேறினர்.
முடிவில் இந்திய அணி, 41.3 ஓவர்களில், 9 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.
இதையடுத்து ‘டக்வர்த்-– லூவிஸ்’ முறைப்படி இந்திய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளை நியூசிலாந்து உடனான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.





