துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், யாரடி நீ மோகினி, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ், காசு பணம் துட்டு என்ற புதிய படத்தை தயாரித்து இருக்கிறது. கஸ்தூரிராஜா இயக்கி இருக்கின்றார்.
புதுமுகங்கள் நடித்து இருக்கிறார்கள்.இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடல்களை நடிகர் தனுஷ் வெளியிட, ஒளிப்பதிவாளர் மது அம்பாட் பெற்றுக்கொண்டார். விழாவில் கஸ்தூரிராஜா பேசியதாவது..
என் மகன்கள் இப்போது சினிமாவில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் என்னை ‘நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய் அம்மாவுடன் லண்டன், சுவிட்சர்லாந்து என்று ஜாலியாக சுற்றுலா போக வேண்டியதுதானே என்கிறார்கள்.
ஆனால் நான் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என்னை நான் ஒரு புதுமுக இயக்குனராக நினைக்கிறேன். இன்று உள்ள புதுமுக இயக்குனர்களைப் பார்த்து பிரமிக்கிறேன். அவர்கள் அமைத்த பாதையில் பயணம் செய்ய விரும்புகிறேன்.
நான் சினிமாவுக்கு வந்தபோது என் கையில் ஒரு புனித நூலும், முதுகில் என் குடும்ப சுமையும் இருந்தது. குடும்பத்தை நல்ல இடத்தில் சேர்க்கும்போது, புனித நூலை தொலைத்து விட்டேன். அதைத்தேடும் முயற்சியில் இப்போது இருக்கிறேன்.
கடந்த 2 வருடங்களாக இந்த படத்துக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து இருக்கிறேன். இந்த படத்தில், என்னைத் தவிர அனைவரும் புதுமுகங்கள் என்று கஸ்தூரிராஜா பேசினார்.
விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது..
இதுவரை அப்பா இயக்கிய படங்களில் நான் கலந்து கொள்ளும் முதல் இசை வெளியீட்டு விழா இதுதான். இந்த படத்தில், என்னை ஒரு பாடல் பாடும்படி அப்பா கேட்டார். ஆனால், எனக்கு நேரம் இல்லாத காரணத்தால் பாட முடியவில்லை. அப்பா தொலைத்த புனித நூலை நானும், அண்ணனும் எடுத்துக்கொண்டு ஆளாகி விட்டோம். இனி அப்பா, அம்மாவுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தனுஷ் பேசினார்.
ஐஸ்வர்யா தனுஷ், இயக்குனர்கள் பொன்ராம், துரை செந்தில்குமார், சரவணன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டார்கள்.





