இசையமைத்தது மூன்று படங்கள். மாட்டிக் கொண்ட பிரச்சினைகள் அதைவிட அதிகம். அனிருத்தின் சினிமா கிராஃபைவிட கான்ட்ரவர்ஸி கிராஃபின் வளர்ச்சி மிரள வைக்கிறது.
அனிருத் சமீபத்தில் தான் இசை அமைத்து பாடிய ஆங்கில அல்பம் ஒன்றை இணையத்தில் பதிவேற்றியிருந்தார். இதில் பெண்களை பற்றி குறிப்பாக தாய்மார்களை பற்றி ஆபாசமாக வர்ணித்திருப்பதாகவும், ஆபாச ஆங்கில வார்த்தைகளை பாடல் முழுவதும் வைத்திருப்பதாகவும் புகார் எழுந்தது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜெபதாஸ் பாண்டியன் என்பவர் பொலிலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு சைபர் கிரைம் பிரிவுக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்த அனிருத்தின் தந்தை ரவிராகவேந்தர் பொலிஸ் கமிஷனரை சந்தித்து பேசினார். அப்போது அவர் அந்த அல்பத்தை இணையத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும், தவறான நோக்கத்துடன் அதை வெளியிடப்படவில்லை என்றும், எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் நீக்கி விட்டதாவும், மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
என்றாலும் மனுதாரார் புகாரை மீளப் பெற்றால்தான் விசாரணையை நிறுத்த முடியும் என்றும், அதுவரை நடவடிக்கை தொடரும் என்றும் தெரிகிறது.
இதுபோக படங்களுக்கு இசையமைக்க முன்பணம் வாங்குவதும் பிறகு நேரமில்லை என்று கழன்று கொள்வதும் அனிருத்துக்கு ஒரு விளையாட்டாகவே ஆகிவிட்டது. ரேடியன்ஸ் மீடியாவின் வாயை முடி பேசவும் படத்துக்கும் இப்படி முன்பணம் ஐந்து இலட்சம் வாங்கினார்.
ஆனால் இசையமைக்கவும் இல்லை, பணத்தை திருப்பித் தரவும் இல்லை. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தந்தார் ரேடியன்ஸ் மீடியா வருண் மணியன்.
என்னதான் கான்ட்ரவர்ஸியின் நாயகனாக இருந்தாலும் அனிருத்துக்குள் ஒரு ஜென்டில்மேனும் இருக்கிறார். பணத்தை திருப்பி தந்ததுடன் ஒரு பகிரங்க மன்னிப்பு கடிதத்தையும் சேர்த்து தந்திருக்கிறார். அதில் தனது நேரமின்மையையும் அடிகோடிட்டு காட்டியிருக்கிறார் அனிருத்.





