அவுஸ்திரேலிய அணியுடன் முதல் வெற்றியை பெற்ற இங்கிலாந்து!!

464

Englandஅவுஸ்திரேலிய மண்ணில் ஆஷஸ் தொடரை இழந்த இங்கிலாந்து அணி ஒருவழியாக முதல் வெற்றியை பதிவு செய்தது.

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரை முற்றிலுமாக இழந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகளுக்கான ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

முதல் மூன்று போட்டியில் வென்ற அவுஸ்திரேலிய அணி, தொடரை 3–0 என ஏற்கனவே கைப்பற்றியது. இந்நிலையில் நான்காவது ஒருநாள் போட்டி பெர்த்தில் நேற்று முன்தினம் நடந்தது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஜார்ஜ் பெய்லி களத்தடுப்பை தெரிவு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அணித்தலைவர் குக்(44), பெல்(55) ஜோடி நல்ல தொடக்கம் அளித்தது.

அதிரடியாக ஓட்டங்கள் சேர்த்த ஸ்டோக்ஸ்(70) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார், பேலன்ஸ்(18) நிலைக்கவில்லை, போபாரா(3) ஏமாற்றினார். கடைசி நேரத்தில் அதிரடியில் மிரட்டிய பட்லர், 71 ஓட்டங்கள் விளாச இங்கிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 316 ஓட்டங்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய அவுஸ்திரேலிய அணிக்கு மார்ஷ்(15) ஏமாற்றினார். தொடர்ந்து வந்த வேட்(23), பெய்லி(11) நிலைக்கவில்லை. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்ச்(108), ஒருநாள் அரங்கில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார்.

பின்வரிசை வீரர்களான பால்க்னர்(2), ஜான்சன்(6) ஏமாற்ற அவுஸ்திரேலிய அணி 47.4 ஓவரில் 259 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.