கடைசிப் போட்டியிலும் இங்கிலாந்து தோல்வி : தொடரை 4-1 என கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!

449

Aus

அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது ஒரு நாள் போட்டி அடிலெய்டில் நேற்று நடந்தது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்த அணி சார்பாக களமிறங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுடன் வெளியேற, பெய்லி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 217 ஓட்டங்களை எடுத்தது.

218 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே மோசமாக அமைந்தது. இயன் பெல் (14), ஸ்டோக்ஸ் (0) நிலைக்கவில்லை.
தலைவர் குக் 39 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ரூட் அரை சதம் எட்டினார். இவரும் 55 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

முடிவில் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இங்கிலாந்து அணியால் 212 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது.
இதன்படி அந்த அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதன் மூலம் அவுஸ்திரேலிய அணி தொடரை 4–1 என வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை பால்க்னர் பெற்றுக் கொண்டார் தொடரின் நாயகனாக அவுஸ்திரேலியாவின் பிஞ்ச் தெரிவு செய்யப்பட்டார்.