
இந்திய சினிமாவின் மிகப்பெரும் சொத்தாக கருதப்படும் கமல்ஹாசனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருக்கிறது.
நடிகராக வெற்றிபெற்றுவிட்டோம் என்று நின்றுவிடாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பல விதங்களில் தன்னை சினிமாவுடன் இணைத்துக்கொண்டிருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கு, இத்தனைக் காலத்தாமதமாக பத்மபூஷன் கிடைக்கிறதே என்பது தான் திரையுலகினரின் கவலையே தவிர மற்றபடி கொண்டாட்டத்தில் தான் இருக்கின்றனர்.
பத்மபுஷன் விருது கிடைத்ததையடுத்து பத்திரிக்கையாளர்களை நேற்று சந்தித்த கமல்ஹாசன்… விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பத்மபூஷன் விருது கிடைத்ததை என்னாலேயே நம்பமுடியவில்லை.
எந்த கலைஞனும் விருதுக்காக உழைப்பதில்லை. இரசிகர்களை மகிழ்விக்க உழைக்கிறான். விருது அவனை தேடிவருகிறது. நான் இந்த அளவிற்கு வந்ததற்கு காரணம் நான் பயின்ற இடங்கள் தான். நான் பயின்ற இடங்கள் ஒவ்வொன்றும் எனக்கு கிடைத்த ஒவ்வொரு பத்மபூஷன்கள் என்று கூறினார்.
மேலும் பேசிய கமல் தினம் ஒரு புது ஹீரோ வருவது ஆரோக்கியமான விஷயம் இல்லை என நான் இன்று நினைத்தால், அன்று ரஜினியோ, கமல்ஹாசனோ வந்திருக்க முடியாது.
இரசிகர்களின் மனது விசாலமான வீடு. அதில் பல அனாதைகள் குடியேறலாம். அப்படி குடியேறிய அனாதைக்குழந்தைகள் தான் நானும், ரஜினியும்.
பொதுவாக நான் எந்த விஷயத்திலும் சமரசம் அடைவது கிடையாது. மனிதநேயத்தினால் செய்வேனே தவிர, எதையும் மிரண்டுபோய் செய்ததுகிடையாது. அன்பால் செய்வது எதுவும் பிழையாகாது என்று பேசினார்.





