கொரோனா வைரஸ் இலங்கையில் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை!!

609

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் ஆபத்து முடிவுக்கு வந்துள்ளதாகவும் வைரஸ் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியான போதிலும் இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் உச்சத்தை நெருங்கவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சம்பந்தமாக தற்போதுள்ள நிலைமைக்கு அமைய எவ்வித எதிர்வுகூறல்களையும் முன்வைக்க முடியாது. வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அரச அதிகாரிகள் அறிவித்து மறுநாள் அதிகளவான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அரசாங்கம் நாட்டில் ஆபத்தான பிரதேசம், கூடுதல் ஆபத்தான பிரதேசம், ஆபத்து குறைந்த பிரதேசம் என வேறுப்படுத்திய சில பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டத்தை நீக்கியுள்ளது. இதுவும் அபாயகரமானதாக அமைந்து விடலாம் எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பிரதேசங்களை பிரிக்க வேண்டுமாயின் அந்த பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நபர்களிடமாவது பரிசோதனைகளை நடத்த வேண்டும். அரசாங்கம் தினமும் மேற்கொண்டு வரும் பரிசோதனை எண்ணிக்கை தொடர்பில் திருப்தியடைய முடியாது.

சில முன்னேற்றமடைந்த ஆபிரிக்க நாடுகள் கூட தினமும் இலங்கையை விட அதிகளவான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.இலங்கைக்கு இணையான சனத்தொகையை கொண்ட வியட்நாம் இலங்கையை விட 24 மடங்கு அதிகமான பரிசோதனைகளை நடத்துகிறது.

நியூசிலாந்து இலங்கையை விட 40 மடங்கு அதிகமான பரிசோதனைகளை நடத்துகிறது. கொரோனா வைரஸ் தொற்றியுள்ளவர்களை அடையாளம் காண இந்த நாடுகள் நடத்தும் பரிசோதனைகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவே அவை இதில் வெற்றி பெற்றுள்ளன எனவும் ஹரித அளுத்கே குறிப்பிட்டுள்ளார்.