
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் மூலம் 374 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வசூல் பணத்தை உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் நலனுக்கும், கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளித்து வருகிறது ஐசிசி.
அந்த அடிப்படையில்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இவ்வளவு பணம் தரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கான பங்குத் தொகை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்குமாம்.
அதாவது, 2015 முதல் 2020 வரையிலான ஐசிசி அட்டவணைக் காலத்தில் பாகிஸ்தானுக்கான தொகையானது 623.55 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதுதவிர பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும், ஐசிசிக்கும் இடையிலான தனிப்பட்ட இரு நபர் ஒப்பந்தப்படியும் அதற்கு கணிசமான தொகை கிடைக்குமாம்.
பாகிஸ்தானில் சமீப ஆண்டுகளாக தீவிரவாத அச்சுறுத்தல், பல நாடுகள் வர மறுப்பது உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதில்லை.
இதன் காரணமாக பாகிஸ்தானுடன் விளையாட விரும்பும் அல்லது முன்வரும் நாடுகள் பொதுவான மைதானங்களான துபாய் அல்லது ஷார்ஜாவில்தான் பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





