சர்ச்சைக்குரிய ஆசாராம் சாமியாருக்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் சொத்து!!

531

Asaramசர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராமுக்கு நாடு முழுவதும் 10,000 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிலங்கள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள் உள்ளன.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள சூரத் ஆசிரமத்தில் 2002 முதல் 2005 வரை படித்து வந்த ஒரு பள்ளி மாணவி, அண்மையில் ஆசாராம் பாபு மீது பாலியல் புகார் கூறியதையடுத்து சூரத் பொலிஸார் அகமதாபாத்திலுள்ள அவரது ஆசிரமத்தில் சில மாதங்களுக்கு முன் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 40 பெரிய பைகளில் இதுவரை வெளிவராத நிதி நடவடிக்கைகள் குறித்த விபரங்களடங்கிய ஆயிரக்கணக்கான ஆவணங்கள் சிக்கின.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் மாநகர காவல்துறை ஆணையர் ராகேஷ் அஸ்தனா கருத்து வெளியிடுகையில்,

ஆசாராமின் ஆசிரமங்களில் நடத்திய சோதனையில் வங்கி கணக்குகள், பங்கு முதலீடுகள், அரசு பத்திரங்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்கள் அடங்கிய அவரது சொத்தின் மதிப்பு 9,000 – 10,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் நிலத்தின் மதிப்பு சோ்க்கப்படவில்லை. இன்னும் பல ஆவணங்ளை மீட்க வேண்டியுள்ளது.

மேலும் ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள எட்டு மாவட்டங்களில் 33 இடங்களிலும், குஜராத்தில் 45 இடங்களிலும் அவருக்கு சொந்தமாக நிலங்கள் உள்ளன.

விதிமீறல்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய நேரடி வரி வாரியம், வருமான வரித்துறை மற்றும் அமலாக்க பிரிவுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்களும் ஆய்வில் உதவினர். இந்த ஆவணங்கள் அனைத்தும் ஒரே இடத்திலிருந்து மீட்கப்பட்டது. இன்னும் பல ஆவணங்களை வேறெங்கும் வைத்துள்ளார்களா என்பது தெரியவில்லை என குறிப்பிட்டார்.