கொரோனா பரிசோதனை..

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கட்டுநாயக்க விமான படை முகாமை சேர்ந்த விமானப்படையின் இசைக்குழுவில் கடமையாற்றிய விமானப் படை அதிகாரியுடன் பழகியதாக கூறப்படும் தனியார் தொலைக்காட்சியில் தொழில் புரியும் ஐந்து பேருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள ஊழியர்களில் தொகுப்பாளர் ஒருவரும் அடங்குவதாக சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி விமானப்படையின் இசைக்குழு நடத்திய இசை நிகழ்ச்சியை குறித்த தொலைக்காட்சி நிறுவனம் ஒளிப்பதிவு செய்துள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில், இரண்டு விமானப்படையினர், கடற்படையின் இசைக்குழுவை சேர்ந்த இருவர் மற்றும் பொலிஸ் இசைக்குழுவை சேர்ந்த சிலரும் இசை நிகழ்ச்சியில் பாடல்களை பாடியுள்ளனர்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ள விமானப்படை அதிகாரி அந்த இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குறுப் கெப்டன் துஷான் விஜேசிங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஊடகவியலாளர்களும் பெரும் ஆபத்தை எதிர்நோக்கி வருகின்றனர். கொரோனா தொடர்பான செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய உட்பட சில நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
-தமிழ்வின்-




