வவுனியாவில் படையெடுக்கும்..
வவுனியாவில் பல்வேறு இடங்களிலும் பாத்தீனியம் படையெடுத்துக் காணப்படுகினறது. குறிப்பாக பாடசாலை செல்லும் வீதிகளிலும், பிரதான வீதிகள், குளக்கட்டுப்பகுதிகள், கோவில்கள் வழிபாட்டுத்தளங்கள், போன்ற மிகவும் முக்கிய மக்கள் ஒன்று கூடும் இடங்களிலும் இச் செடிகளை காணக்கூடியதாக உள்ளது.
இதனைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த காலங்களில் உரிய திணைக்களங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி பாத்தீனியத்தைக்கட்டுப்படுத்த பல நடவடிக்கையினை மேற்கொண்டுள்ள போதிலும் தற்போது இவ்விடயத்தில் கவனமற்றுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
பல பகுதிகளிலும் பாத்தீனியத்தினைக் கட்டுப்படுத்துவதற்கு விழிப்புணர்வு விளம்பரப் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டபோதிலும் அதனை கட்டுப்படுத்தி அழித்தொழிப்பதற்கு போதியளவில் முக்கியத்துவம் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
அத்துடன் பாத்தீனியம் அதிகம் காணப்படும் இடங்களை அப்பகுதியிலுள்ள கிராம அபிவிருத்திச்சங்கம், பொது அமைப்புக்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பாடசாலைச்சமூகம் ஒன்றிணைந்து இவற்றை அழித்தொழிப்பதற்கு முன்வரவேண்டும்.
பாத்தீனியத்தினால் நன்மைகளை விட தீமையே அதிகம். இவை அனைத்து பகுதிகளிலும் பரந்து கிடக்கின்றன. இவை வெளியிடும் மகரந்தம் மற்றும் வித்துக்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு சுவாசக்கோளாறுகளையும் , ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகின்றன.
இவற்றின் மீது எமது உடல் படும் போது ஒருவிதமான அரிப்பு காணப்படும். இவற்றை உண்ணும் பசுக்களின் பால் ஒரு வித கசப்புத்தன்மையையும் , சிறிதளவான அதாவது மறைமுகமான நச்சுத்தன்மையையும் கொண்டிருக்கும். மக்களின் நலனை சிந்தித்து செயற்படுவார்களா உரிய அதிகாரிகள்.