வீதிக்கு வந்த குடும்பம்..
தமிழகத்தில் வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் அங்கிருந்து துரத்தப்பட்ட நபர் தனது மனைவி, குழந்தைகளுடன் சாலையோரத்தில் உள்ள மரத்தின் அடியில் தங்கினார்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை அருகே உள்ள மணவாடி பெரியார்நகர் காலனியை சேர்ந்தவர் நாகராஜன் (30). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் குடும்பத்துடன் அதே பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், கூலி வேலைக்கு கூட செல்ல முடியாமல், குடும்பத்தை நடத்த அன்றாட செலவுக்கே வருமானமின்றி நாகராஜன் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கடந்த மாதம் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நாகராஜன் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான லட்சுமியோ, கடந்த மாதமே நாகராஜனிடம் வாடகையைக் கேட்டு தொ ல்லை கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தனது நிலைமையைச் சொல்லி நாகராஜன் கண்ணீர் வடித்தும், லட்சுமி மனமிறங்கவில்லையாம். இருந்தாலும் ஒரு மாத காலத்தை நாகராஜன் அங்கேயே கழித்துள்ளார்.
இந்த நிலையில், மே மாதம் பிறந்துள்ளதால், ஏப்ரல் மாதத்துக்கான வாடகைப் பணத்தைக் கேட்டு நச்சரித்த லட்சுமி பணம் இல்லையென்றால் வெளியே போ என கூறியுள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த நாகராஜன், வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் மனைவி, குழந்தைகளுடன் கரூர்-வெள்ளியணை சாலையின் ஓரத்தில், மணவாடி அருகே அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பொலிசார் அங்கு வந்து, நாகராஜனிடம் விவரம் கேட்டறிந்தனர். பின்னர் வீட்டு உரிமையாளரை அழைத்து, பேசினர்.
அப்போது நாகராஜன், ஊரடங்கு முடிவுக்கு வந்தவுடன் வீட்டு வாடகை பாக்கியையும், முன்பணத்தையும் தருவதாக ஒத்துக்கொண்டார். அதுவரை அவரை வீட்டை காலி செய்ய நிர்ப்பந்திக்கக் கூடாது என உரிமையாளரிடம் பொலிசார் கூறினர்.
இதை வீட்டு உரிமையாளர் ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கட்டில் உள்ளிட்ட பொருட்களுடன் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வாடகை வீட்டுக்கு மீண்டும் நாகராஜன் சென்றுள்ளார்.