இலங்கையில் நேற்று திடீரென அதிகரித்த கொரோனா நோயாளர்கள் : கவலையில் சுகாதார அதிகாரிகள்!!

478

கொரோனா நோயாளர்கள்..

இலங்கையில் நேற்றைய தினம் 33 கொரோனா நோயாளர்கள் பதிவாகியதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

“நேற்று பதிவாகிய 33 கொரோனா நோயாளர்களில் 31 பேர் விடுமுறைக்கு வீடு சென்ற மீளவும் அழைக்கப்பட்ட கடற்படையினராகும்.

நேற்று இரவு வரை நோயாளிகள் இல்லை என்பதனை குறித்து மகிழ்ச்சியாக இருந்தோம். எனினும் நாள் முடியும் போது 33 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். ஆரம்பத்தில் மூவரே அடையாளம் காணப்பட்டனர். இறுதியில் 33 ஆக பதிவாகியது.

இந்த 33 பேரில் ஒருவர் கடற்படையினரின் குடும்பத்தை சேர்ந்த 13 வயதுடைய சிறுவனும், கடற்படையினருக்கு தொடர்புடைய 70 வயதுடைய பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
ஏனைய 31 பேர் கடற்படை சிப்பாய்களாகும். இவர்கள் விடுமுறைக்கு வீடு நோக்கி சென்றவர்களாகும்.

எனினும் இந்த அனைவரும் தற்போது தங்கள் வீடுகளில் இல்லை. குடும்ப உறுப்பினர்களுடன் அவர்கள் ஒரு இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். பரவல் குறைவடைந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 755 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 194 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.