மருந்து கண்டுபிடிப்பு..
கடந்த பல மாதங்களாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்து வந்துகொண்டிருக்கும் நிலையில் மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இஸ்ரேல் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விட்டதாக அறிவித்திருந்தது.
அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னணி நாடாக இஸ்ரேல் இருந்து வருகிறது. அந்நாடு இப்படியொரு அறிக்கையை வெளியிடுகிறது என்றால் நிச்சயமாக கொரோனா தடுப்பு மருந்து நன்றாக வேலை செய்யும் என நம்பலாம் என அறிவியல் வல்லுநர்களும் தெரிவித்திருந்தனர்.
நேற்று முன் தினம் இத்தாலியும் மருந்தைக் கண்டுபிடித்ததாகவும் எலிகளுக்கு ஏற்றி அது வெற்றிபெற்றதாகவும் இத்தாலி அறிவித்துள்ளது.
ரோம் நகரின் ஸ்பாலான்சானி என்ற மருத்துவமனையில் எலிகளை பயன்படுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் முடிவில் மனித உயிரணுக்களில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், “தடுப்பூசியை சோதனை செய்வதற்கு எலிகள் பயன்படுத்தப்பட்டன. தடுப்பூசிக்கு பிறகு எலிகளில் உள்ள செல்கள் வைரசுக்கு எதிரான எதிர்செல்களை உருவாக்கி கொண்டுள்ளது.
இதேபோன்று மனித உயிரணுக்களிலும் வைரஸ் தொற்றுக்கு எதிராக எதிர்செல்களை தடுப்பூசிகள் உருவாக்கும். இதன் மூலம் வைரசானது மனித உயிரணுக்களில் மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும் என இத்தாலியும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சீன நிறுவனம் அறிவித்துள்ளது. பிகோவாக் எனப்படும் இந்த மருந்தை பீஜிங்கைச் சேர்ந்த சினாவாக் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
குரங்குகளுக்கு இம்மருந்தை செலுத்தி, 3 வாரங்களின் பின்னர் கொரோனா தாக்குதலுக்கு உட்படுத்தினர். அடுத்த ஒரு வாரத்திற்கு பின்னர் சோதனை செய்து பார்த்தபோது, குரங்குகளின் நுரையீரலில் வைரஸ் தொற்று இல்லாதது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், மருந்து செலுத்தப்படாத கொரோனா தொற்றுக்கு உள்ளான குரங்குகளுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் பிகோவாக் தடுப்பு மருந்து குரங்குகளில் வெற்றிகரமாக செயற்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.