வவுனியாவில் 2108 மெற்றிக்தொன் நெல் அரச களஞ்சியசாலைகளில் இருப்பு!!

523

வவுனியாவில் 2108 மெற்றிக்தொன் நெல், அரச நிறுவனங்களால் கொள்வனவு செய்து களஞ்சியசாலைகளில் உள்ளதோடு தனியார் அரிசி ஆலைகளில் 3147 மெற்றிக்தொன் நெல் கையிருப்பிலும் உள்ளது.

அத்துடன் ஜனாதிபதி செயலணியின் இலக்கை நோக்கி நகர துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி. ஈஸ்வரராஜன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள நெல் கையிருப்பு தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா மாவட்டத்தில் 4000 ஹெக்ரெயர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் குளங்களில் உள்ள நீரின் அளவிற்கும் காலநிலை அவதான நிலையத்தின் தகவலுக்கும் அமைவாக 1900 ஹெக்ரெயர் நெற்செய்கையே மேற்கொள்ள முடியும்.

இதுவரை 1795 ஹெக்ரெயர் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காலநிலை அறிவுறுத்தல் தொடர்பாக விவசாயிகளிற்கு தெரியப்படுத்தும் விதமான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளோம்.

விவசாயத்தில் தன்னிறைவடைந்த நாம் சிறுதானியங்களை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு பாரிய சவால் ஏற்பட்டுள்ளது. அந்த இறக்குமதிகளை தடைசெய்யும் விதமாக மாவட்டங்கள் தோறும் இலக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

எங்கு விவசாயம் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளது என்பதனை துள்ளியமாக ஆராய்ந்து இந்த இலக்குகள் வழங்கப்பட்டுள்ளது. இது சாதாரணமான இலக்கை விட அதிகமானதாகும்.

ஜனாதிபதி செயலணியின் மூலமாக எமது மாவட்டத்தில் பயிரிடவேண்டும் என தரப்பட்ட இலக்குகளில் 4 ஆம் திகதி வரை நாம் 507 ஹெக்ரெயர் வரையில் அடைவு மட்டத்தினை அடைந்துள்ளோம். இது 21.48 வீதமாக உள்ளது.

அத்துடன் சமூக பாதுகாப்பு திணைக்களமும், தம்மால் பயிரிடக்கூடிய மரக்கறி செய்கையின் அளவை 47.7 ஹெக்ரெயராக தந்துள்ளனர். இதன் பிரகாரம் 899.7 ஹெக்ரெயர் பிரதேசத்தில் உற்பத்திகளை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவை வீட்டுத்தோட்ட செய்கைக்கு மேலதிகமானதாகவுள்ளது. எனவே மரக்கறிகளின் அளவு மாவட்டத்தில் மேலதிகமாக இருக்கும் என்பதனால் வீட்டுத்தோட்ட செய்கையாளர்களை அவர்களின் தேவைக்கு மட்டும் உற்பத்தியை செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒவ்வொரு கடைகளிலும் இருக்க வேண்டிய பசளைகளின் அளவும் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதி செயலணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுதானிய பயிர்ச்செய்கையிலும் மாற்றுப்பயிர்ச்செய்கையிலும் மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டாமைக்கு முக்கிய காரணமாக காலநிலை மாற்றம் காணப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தினால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் போது அவர்களுக்கு போதுமான காப்புறுதி கொடுக்கப்படவேண்டும். அத்துடன் சந்தையில் விலைத்தளம்பல் காணப்படுகின்றமையும் ஓர் காரணமாக அமைகின்றது.

எனவே இவ்விரண்டு காரணங்களையும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி செயலணிக்கு அறிக்கையொன்று வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியாவில் நெல் சந்தைப்படுத்தும் சபையால் ஆயிரத்து என்னூற்றி ஐம்பது (1850) மெற்றிக்தொன் காயவைத்த நெல் கொள்வனவு செய்து களஞ்சியசாலைகளில் உள்ளது.

அத்துடன், வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கததினால் ஈரமான நெல்லாக 218.64 மெற்றிக்தொன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஆகவே மொத்தமான வவுனியா மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் 2108.64 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலைகளில் உள்ளது.

இதேவேளை தனியார் அரிசி ஆலைகளில் 3147 மெற்றிக்தொன் நெல் தற்போது கையிருப்பில் உள்ளது எனவும் தெரிவித்தார்.