பழனியப்பன் பிரியதர்சினி..
கொவிட் – 19 தாக்கத்திற்கு மத்தியிலும் எதிர்கால பொருளாதாரத்திற்காகவும், தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காகவும் உழைக்கும் ஒரு குடும்பப் பெண்ணே வவுனியா, பாரதிபுரம், பாடசாலை வீதியில் வசிக்கும் பழனியப்பன் பிரியதர்சினி.
வீட்டுடன் இணைந்த 2 ஏக்கர் காணியை பயனுள்ளதாக மாற்றி அந்த வருமானத்தில் தமது குடும்ப செலவை போக்கி, உழைக்கும் மக்களுக்கு முன்னுதாரணமானவாராக திகழ்கின்றார் பிரியதர்சினி.
வீட்டுத் தோட்டமாக மரக்கறிகள், பழவகைகள், வாழைகள், கீரைவகைகள், பூ வகைகள், நெல் உள்ளிட்ட தானியங்கள் என அனைத்து வித பயிர்செய்கையையும் இயற்கையான பசளையை பயன்படுத்தி உற்பத்தி செய்து வருகின்றார்.
ரோஜா போன்ற பூக்கன்றுகளுடன் இணைந்து மரக்கறி வகைகளையும் ஊடு பயிர்களாக செய்கை பண்ணியுள்ளார். தோட்டத்துடன் இணைந்ததாக ஆடு, கோழி என்பவற்றை வளர்ப்பதுடன் அதன் கழிவுகளையும் பசளையாக பயன்படுத்தி வருகின்றார்.
அத்துடன் நிலத்தில் சிறிய வட்டத் தொட்டி அமைத்து அதில் அசோலா என்ற பாசி வகைத் தாவரத்தை வளர்த்து அதனை பயிர்களுக்கு பசளையாகவும், கோழி, ஆடு, மாடு என்பவற்றுக்கு தீனியாகவும் தவிட்டுடன் கலந்தும் வழங்கி வருகிறார்.
இதனால் தாவரங்கள் செழிப்பாக வளர்வதுடன் விளைச்சலின் அளவும் அதிகரித்துள்ளது என்கின்றார். அசோலா தாவரம் காரணமாக கோழி தொடர்ந்தும் முட்டை இடுவதாகவும், மஞ்சள் கரு பெரிதாக உள்ளதாகவும் கூறும் பிரியதர்சினி மாட்டின் பாலின் அளவும் ஒரு லீற்றர் அளவில் அதிகரித்துள்ளது என்கின்றார்.
வீடு மற்றும் அதன் சுற்றுபுறக் காணி முழுவதும் சோலையாக வைத்து சிறந்த வருமானத்தைப் பெற்று வந்த பிரியதர்சினிக்கு 2018ம் ஆண்டு சிறந்த வீட்டு தோட்ட செய்கையாளர் என்ற மாவட்ட மட்ட விருதும், மாகாண மட்டத்தில் சிறந்த தோட்ட செய்கையாளர் விருதில் முதலாம் இடத்தையும் பெற்றதுடன், தேசிய ரீதியில் 7வது இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
சிறந்த விவசாய முயற்சியாளரான பிரியதர்சினியை கொவிட் 19 தாக்கமும் விட்டு வைக்கவில்லை. கொவிட் தாக்கத்தையடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தாலும், போக்குவரத்து பிரச்சனையாலும் இங்கு அறுவடை செய்யப்படும் மிளகாய், கத்தரி, பூசணி உள்ளிட்ட மரக்கறி வகைகளை விற்பனை செய்ய முடியவில்லை என்பது இவரது கவலை.
இதனால் எதிர்கால பொருளாதார தேவையைக் கருத்தில் கொண்டு தற்போதைய அறுவடைக்கால தோட்டங்களை அழித்து இயற்கை முறையில் ஜனாதிபதியின் திட்டத்திற்கமைய அரசாங்கத்தால் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஊடாக வழங்கப்படும் சௌபாக்கிய திட்டம் மூலம் வழங்கப்படும் விதையினங்களையும், வேறு கிராமிய பயிர் செய்கைகளையும் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நட்டத்தை இன்னும் மூன்று மாதத்தில் ஈடுசெய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் இயற்கையான பசளைகளைப் பயன்படுத்தி புதிய பயிற்செய்கையில் ஈடுபட்டுள்ளார். கச்சான், கொள்ளு, வாழை, மிளகாய், கத்தரி, பூசணி என மீண்டும் தன்னம்பிகையுடன் வீட்டுத் தோட்டத்தை அழகுறச் செய்யும் பிரியதர்சினியின் முயற்சி பாராட்டுக்குரியது.