பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவது எப்போது?
கொரோனா வைரஸ் தொற்றின் பின்னர் மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் தினம் இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அலஹபெரும தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
66 நாட்களின் பின்னர் இன்று முழு நாட்டிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. எதிர்வரும் வாரத்தினுள் சமூக இடைவெளியை கடைபிடித்தல், போக்குவரத்து துறை தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் மிகவும் ஆராய்ந்த பின்னர் கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகள் மீள ஆரம்பித்தல் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளினால் இன்றைய தினம் கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
மாணவர்களை பல கட்டங்களிலேயே பாடசாலைகளுக்கு அழைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள் முதலில் அழைக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றி பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.