இந்திய மாநில அதிகாரத்தைப் போல் இலங்கையிலும் வழங்கப்பட வேண்டும் : சம்பந்தன்!!

469

Sampanthan, leader of the political proxy of the Tamil Tigers, the Tamil National Alliance, addresses reporters during a media conference  in Colomboஇந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எத்தகைய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரத்தைத்தான் இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கூறினார்.

சென்னை அடையாறில் உள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ‘இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதன்போது அவர் உரையாற்றியதாவது..

இலங்கை ஐனாதிபதியாக மகிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றதும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். இதற்காக 16 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்தார்.



அந்தக் குழு சாத்தியமான தீர்வு திட்டங்களையும் உருவாக்கியது. ஆனால் அதன்பிறகு ராஜபக்ஷ இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை.

இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 13வது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால் இலங்கை அரசாங்கம் அந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு மீள்குடியேற்றம் செல்ல முடியவில்லை. வளர்ச்சித் திட்டங்களுக்கு என்று சொல்லி தமிழர் பகுதியில் 500 ஏக்கர் நிலம் ராணுவத்துக்கு எடுக்கப்பட்டு அவர்களுக்கு குடியிருப்புகள் கட்டப்படுகின்றன. தமிழர் பகுதிகள் சிங்களமயமாக்கப்பட்டு வருகின்றன.

ஒருமித்த நாட்டுக்குள் எந்தவித குந்தகமும் இல்லாமல் விவசாயம், தொழில், வியாபாரத்தோடு நாங்கள் வாழ்ந்தால் போதும். இந்தியாவில் மாநிலங்களுக்கு என்ன அதிகாரங்கள் வழங்கப் பட்டுள்ளதோ அத்தகைய அதிகாரத்தைத்தான் இலங்கையில் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் தனி ஈழத்தைக் கேட்கவில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறோம் என சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.