காதலனின் மருத்துவப் படிப்புக்காக நகை திருடிய பெண் கைது!!

601

arrestedகாதலனின் மருத்துவப் படிப்புக்காக நிதி நிறுவன அதிபர் வீட்டில் தங்க வைர நகைகளை திருடிய தனியார் மருத்துவக் கல்லூரி மாணவியை காதலனுடன் தனிப்படை கைது செய்தனர். 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் எம்.எம். அவென்யூ பிரதான தெருவைச் சேர்ந்தவர் ஜெயகுமார், 58. இவர், இங்குள்ள மேட்டுத் தெருவில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 10ம் திகதி இவரது வீட்டில் வைர நகைகள் உட்பட, 103 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

ஜெயகுமாரிடம் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், அவரது வீட்டில், வாடகைக்கு குடியிருந்து வரும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி சவுமியா உட்பட, பலரிடம், பொலிசார் தனித்தனியாக விசாரித்தனர்.

அப்போது சவுமியா மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணான பதில் கூறினார். இதையடுத்து சவுமியாவை பார்க்க அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் இரண்டாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் மணிகண்டனை பிடித்து பொலிசார் விசாரித்தனர்.



இதற்கிடையில் கடந்த 11ம் திகதி மாலை முதல் 12ம் திகதி காலை வரை, நிமிடத்திற்கு நிமிடம் மணிகண்டனை, சவுமியா அலைபேசியில் தொடர்பு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று மாலை, 4:00 மணிக்கு பேசிய போது, சவுமியாவை புதிய ரயில் நிலையத்திற்கு வருமாறு, பொலிசார் கூறியபடி, மணிகண்டன் அழைத்தார். அதன்படி, ரயில் நிலையத்திற்கு வந்த சவுமியாவிடம் இரவு 10 மணி வரை, பொலிசார் விசாரணை நடத்தியதில், ஜெயகுமார் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

என் சொந்த ஊர் ஈரோடு, பவானி. தந்தை கோவிந்தராஜ், தனியார் பள்ளியை நடத்தி வருகிறார். நான், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். ஜெயகுமாரின் வீட்டு மாடியில் தங்கி, கல்லூரிக்குச் சென்று வந்தேன். என்னுடன் படிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டனுடன்,(26) பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் காதலித்து வந்தோம். அவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்வில் தோல்வி அடைந்ததால் நான்காமாண்டு படிக்க வேண்டிய இவர் இரண்டாம் ஆண்டு தான் படித்து வருகிறார். தோல்வி அடைந்த பாடங்களை பாஸ் செய்ய, ஒவ்வொரு பாடத்திற்கும் 1.50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்காக, உதவி செய்யுமாறு என்னை அணுகினார். என் வீட்டிலும் அவ்வளவு பணம் இல்லை. இதனால் ஜெயகுமார் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டோம்.

சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தோம். வங்கிப் பெட்டகத்தில் இருந்த நகைகளை எடுத்து வந்து, வீட்டில் ஜெயகுமார் வைத்ததைத் தெரிந்து கொண்டேன். கடந்த 10ம் திகதி காலையில் ஜெயகுமாரின் மனைவி, சென்னைக்கு சென்று விட்டார். மாலை, 5 மணிக்கு, வழக்கம் போல் ஜெயகுமாரும் நிதி நிறுவனத்திற்கு சென்று விடுவார்.

அதுதான் சரியான நேரம் என, முடிவு செய்து, மணிகண்டனை, மாலை 6.10 மணிக்கு வரவழைத்தேன். சாவியைக் கொடுத்து, உள்ளே அனுப்பினேன். நகைகள் இருந்த இரும்புப் பெட்டகத்துடன், வெளியில் வந்தார். என்னுடைய காரை அவரிடம் கொடுத்து, அனுப்பி வைத்தேன்.

கதவை திறந்தே வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல், மாடிக்குச் சென்று விட்டேன் என்றார். மருத்துவக் கல்லூரி விடுதியில் பதுக்கி வைத்திருந்த, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை மீட்ட பொலிசார், காதலர்களை கைது செய்தனர்.