பங்களாதேஷ் அணியை போராடி வென்ற இலங்கை தொடரை கைப்பற்றியது!!

389

SL

சிட்டகொங் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான பரபரப்பான 20- 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் இன்றைய போட்டி இரு அணிகளின் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

அந்தவகையில் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.



இதன் அடிப்படையில் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது பங்களாதேஷ். இவ்வணியில் அனாமுல் ஹக் 24 ஓட்டங்களையும் ஸபீர் ஹசைன் 26 ஓட்டங்களையும் அதிகூடுதலாக பெற ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

இலங்கை அணியின் பந்து வீச்சில் மாலிங்க மூன்று விக்கெட்டுகளை கைப்பற்ற குலசேகர மற்றும் சச்சித்திர சேனாநாயக ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து இலகுவான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி மிகவும் போராட்டத்துக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்று மூன்று விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம் முடியாத இலங்கை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன ஆட்டமிழந்தனர். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா 21 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க டில்சான் 3, சந்திமால் 3, ஏஞ்சலோ பெரேரா 4, மெத்தியூஸ் 2, குலசேகர 2 ஓட்டங்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க குமார் சங்கக்கார மற்றும் திசர பெரேரா ஆகியோரின் நிதான ஆட்டத்தால் இலங்கை போராடி வெற்றி பெற்றது.

குமார் சங்கக்கார 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 35 ஓட்டங்களை பெற்றார். மேலும் இறுதிப் பந்தில் வெற்றிக்கு இரு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது சச்சித்திர சேனாநாயக நான்கு ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக திசர பெரேரா தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாக நுவான் குலசேகல தெரிவு செய்யப்பட்டார்.