வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி இருவரிடம் ஏழு லட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
புத்தளத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மோசடி செய்த நபர் கண்டியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக்கூறி கடந்த நவம்பர் மாதம் 29ஆம் திகதி 3,50,000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டதாக புத்தளம் பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் சமாத் மொஹோது நியாஸ் (34) என்பவர் புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி சந்தேகநபர் 3,50,000 ரூபாவை தன்னிடமிருந்து பெற்றுக் கொண்டதாக கற்பிட்டி, ஆனவாசல பிரதேசத்தைச் சேர்ந்த நசூர்தீன் ஹமீயாஸ் (46) முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபர் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன் தமக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தரவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செடி சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.