உலக கோப்பையை வென்று மீண்டும் சாதனை வரிசையில் இணைவோம் என்று இந்திய அணித்தலைவர் டோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2015ம் ஆண்டு பெப்ரவரி 14ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது.
உலக கோப்பை திருவிழாவுக்கு தொடங்க சரியாக ஓராண்டு இருப்பதை யொட்டி இந்திய அணித்தலைவர் டோனி, ஐ.சி.சி. இணையதளத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், உலக கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியில் களம் இறங்க இன்னும் ஓராண்டு மட்டுமே இருக்கிறது என்பதை நினைக்கும் போது சிலிர்ப்பாக உள்ளது.
மும்பையில் அந்த அதிசயத்தக்க இரவு வந்து (உலக கோப்பையை வென்ற நாள்) ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் ஓடோடி விட்டது.
அந்த இரவு மட்டுமின்றி, அந்த ஒட்டுமொத்த தொடரும், என்றுமே எங்களது வாழ்க்கையில் மறக்க முடியாதது. உலக கோப்பை வரலாற்றில், மேற்கிந்திய அணி மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மட்டுமே உலக கோப்பையை அடுத்தடுத்து ருசித்த அணிகள் என்பதை நாங்கள் அறிவோம்.
அந்த சாதனைப்பட்டியலில் 3வது அணியாக எங்களால் இடம் பிடிக்க முடியும். அதற்குரிய தகுதி எங்களிடம் இருப்பதாக நம்புகிறேன். உச்சக்கட்ட நெருக்கடிக்கு மத்தியில் விளையாடும் போது அதை திறம்பட சமாளிக்கக்கூடிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.
2011ம் ஆண்டு உலக கோப்பை மற்றும் 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த ஐ.சி.சி. சம்பியன்ஸ் கோப்பை ஆகிய போட்டிகளில் இதை நாங்கள் நிரூபித்து காட்டியுள்ளோம். நியூசிலாந்தில் நடந்த ஒரு நாள் தொடரில் நாங்கள் ஒரு ஆட்டத்தில் கூட வெல்லவில்லை.
ஆனால் இந்த தொடர் உலக கோப்பைக்கு தயாராவதற்கு பயனுள்ள அனுபவத்தை கொடுத்துள்ளது. 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற போது ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சிக்குள்ளானது என்றும் 2015ம் ஆண்டிலும் அதை மீண்டும் செய்ய விரும்புகிறோம் எனவும் கூறியுள்ளார்.





