காதலுக்கு உதவிய குற்றத்திற்காக பள்ளியை விட்டு நீக்கப்போவதாக தலைமையாசிரியர் அறிவித்ததால் மனமுடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள துணிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனியை அடுத்த சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வி(16). என்பவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பள்ளியில் கூடலூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இருவரும் ஒருவரை யொருவர் காதலித்து வந்துள்ளனர்.
இதே பள்ளியில் சின்னமனூர் வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்த மாரிச்சாமி மகன் ராமன்(17), மகள் வனிதா(16) ஆகிய இருவரும் 10ம் வகுப்பு படித்து வந்தனர்.
செல்வி–சுரேஷ் காதலுக்கு அண்ணன்– தங்கை இருவரும் உதவி வந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காதல்ஜோடி இருவரும் மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இதற்கு ராமன், வனிதா ஆகிய இருவரும் உதவியுள்ளனர்.
மாயமான காதல் ஜோடியின் பெற்றோர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை புவனேஸ்வரியிடம் இந்த காதல் விவகாரத்திற்கு ராமனும், வனிதாவும் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
பின்னர் அண்ணன்– தங்கை கொடுத்த தகவலின் அடிப்படையில் காதல் ஜோடியின் பெற்றோர், தலைமையாசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியர் செல்வக்குமார் ஆகியோர் மதுரைக்கு சென்று காதல் ஜோடியை மீட்டு அவரவர் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் தலைமையாசிரியர், ஆசிரியர் செல்வக்குமார் ஆகிய இருவரும் மாணவியை காதலித்த சுரேசுக்கு டி.சியை கொடுத்து இனி எங்கள் பள்ளிக்கு வராதே என அவரை அனுப்பி விட்டனர்.
மேலும் காதல் ஜோடிக்கு உடந்தையாக இருந்த ராமன், வனிதா ஆகிய இருவரையும் தலைமையாசிரியர், ஆசிரியர் இருவரும் கண்டித்து நாளை முதல் நீங்கள் பள்ளிக்கு வரக்கூடாது உங்களுக்கு டி.சி கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
இதனால் மனமுடைந்த அண்ணன்–தங்கை இருவரும் அருகே உள்ள கடைக்கு சென்று எறும்பு பொடி வாங்கி தண்ணீரில் கலந்து பள்ளி வளாகத்திலேயே குடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் மயங்கி விழுந்தனர்.
இதனைக்கண்ட ஆசிரியர்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சின்னமனூர் பொலிசார், அண்ணன்– தங்கையை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமையாசிரியர் புவனேஸ்வரி, ஆசிரியர் செல்வக்குமார் ஆகிய இருவர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




