
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 192 ஓட்டங்களில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 438 ஓட்டங்களை குவித்தது.
246 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய நியூசிலாந்து நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 571 ஓட்டங்களை குவித்து இருந்தது. இதில் அணித்தலைவர் மக்கலம் 281 ஓட்டங்களுடனும், நீசம் 67 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று ஐந்தாவதும் கடைசி நாள் ஆட்டமும் நடந்தது. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். மக்கலம் மிகவும் அபாரமாக விளையாடி முச்சதம் அடித்தார். 557 பந்துகளில் 32 நான்கு ஓட்டங்கள், 4 ஆறு ஓட்டங்களுடன் அவர் 300 என்ற ஓட்ட எண்ணிக்கையை தொட்டார்.
இதன் மூலம் முச்சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார். முன்னதாக ஜிம்மி நீசம் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். 123 பந்துகளில் சத்தத்தை பெற்றுக் கொண்டார்.
மக்கலம் 302 ஓட்டங்களை குவித்து இருந்த போது ஷகீர் கான் பந்தில் ஆட்டம் இழந்தார். ஏழாவது விக்கெட் ஜோடி 179 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து வந்த சவுத்தி 11 ரன்னில் வெளியேறினார்.
நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 680 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 435 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி சார்பாக ஷகீர்கான் 5 விக்கெட் கைப்பற்றினார்.
இந்திய அணி 52 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ஓட்டங்கள் எடுத்து இருந்தபோது ஆட்டம் முடித்து கொள்ளப்பட்டது. இதன்படி போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. வீராட் கோலி 105 ரன்னும், ரோகித்சர்மா 31 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மக்கலம் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். இந்த டெஸ்ட் சமநிலையில் முடிந்ததால் நியூசிலாந்து 1–0 என்ற கணக்கில் தொடரை வெற்றி பெற்றது.
ஏற்கனவே 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 0–4 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.





