அரச ஊழியர்களிற்காக ஓமந்தையில் வழங்கப்பட்ட காணிகளில் வீடுகளை அமைத்த நிலையில் குடியிருக்காதவர்களது காணிகளை இரத்துசெய்துவிட்டு, காணிவீடு அற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுனர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆளுனர் திருமதி சார்ள்ஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் இணைத்தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றிய காணிஅற்ற 600க்கும் மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு கடந்த 2009ம் ஆண்டு ஓமந்தை பகுதியில் காணிகள் வழங்கப்பட்டு குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அவற்றில் 131 வீடுகள் யாருமற்ற நிலையில் வெறுமையாக இருப்பதாக வீடமைப்பு அதிகாரசபை அதிகாரியால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கருத்து தெரிவிக்கையில்,
ஓமந்தையை போலவே வவுனியா சாளம்பைக்குளம் மற்றும் சிங்கள பிரிவுகளிலும் வீட்டுத்திட்டத்தினை பெற்றபின்னர் பொது மக்கள் வசிக்காத வீடுகள் பல இருக்கின்றன.
அவையும் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தான். எனவே அவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் வீடுகள் உள்ள பலருக்கு வவுனியா நகரப்பகுதியிலும் வீடுகள் உள்ளன. அது எனக்கும் தெரியும்.
எனவே வெறுமையாகவுள்ள வீடுகளில் வசிக்காதவர்களது காணிகளை இரத்து செய்துவிட்டு வீடற்றோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஆளுனரால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், சாளம்பைக்குளம் மற்றும் சிங்கள பகுதிகளில் இவ்வாறான நிலமை இருந்தால் பிரதேச செயலாளர்கள் அதனை ஆராயுமாறு தெரிவித்துள்ளார்.