ஆசிய கிண்ணத்தைக் கைப்பற்றப்போவது யார்?

549

Asia Cup

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றப் போகும் அணியை கணித்துள்ளார் பாகிஸ்தானின் பயிற்சியாளர் முகமது அக்ரம். ஆசிய கிரிக்கெட் கவுன்சில்(ஏ.சி.சி) சார்பில் 12வது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் பெப்ரவரி 25ம் திகதி முதல் மார்ச் 8ம் திகதி வரை நடக்கிறது.

இதில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் பங்கேற்கிறது.

நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள பாகிஸ்தான் தயாராகி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முகமது அக்ரம் கூறுகையில், இம்முறை ஆசிய கிண்ணத்தை வெல்லும் அணியை கணிப்பது கடினம். இந்த வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் சம அளவில் உள்ளன.

ஆடுகளங்கள் துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அறிமுக அணியான ஆப்கானிஸ்தானை குறைத்து மதிப்பிடக் கூடாது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான போட்டி முக்கியமானது. எங்கள் அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதால் இந்திய அணியை வீழ்த்துவோம்.

ஒன்றரை ஆண்டுகளில் எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் டெஸ்ட், ஒருநாள் போட்டி என மொத்தம் 2200 ஓவர்கள் வீசினர், இதில் நான்கு முறையற்ற பந்து மட்டும் வீசியுள்ளனர் .

எங்கள் அணிக்கு எதிராக ஐந்து முறை மட்டும் எதிரணியால் 300 அல்லது அதற்கு மேல் ஓட்டங்கள் எடுக்க முடிந்தது, எங்கள் அணியின் பந்துவீச்சு வெற்றிக்கு முக்கிய பங்குவகிக்கும் என்று தெரிவித்துள்ளார்.