இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் நீண்ட காலமாக இழுபறியில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு கூட்டு மீன்பிடி தொழில் முறையைத் தீர்வாக வைக்கவிருப்பதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ள கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இலங்கையின் வடபகுதி மீனவர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
இலங்கை இந்திய கடற்பரப்புகளுக்குள் இருநாட்டு மீனவர்களும் இணைந்து தொழில் செய்வதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்றும், இது இந்திய மீனவர்கள் ஆழ் கடலில் சென்று மீன்பிடிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு ஒரு தீர்வாக அமையும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
அரசுகளால் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை அனுமதிக்காத வகையில் தொழில்புரிய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டுத் தொழில் முறைபற்றி முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்கிறார் அண்மையில் இலங்கை இந்திய மீனவ பிரதிநிதிகள் குழுக்களிடையில் இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டிருந்த மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்டின் சொய்சா.
“அடுத்த மாதம் இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் இரண்டாம் கட்டமாக சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தவுள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ள அமைச்சரின் இந்தக் கூற்று மீனவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார் ஜஸ்டின் சொய்சா.
ஏற்கனவே நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளில் இலங்கை எல்லைக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் மார்ச் 13 ஆம் திகதி வரையில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பினுள் பிரவேசிக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் மீனவர்கள் சார்பாகவும், மன்னார் மாவட்ட மீனவர் சம்மேளனத் தலைவர் என்ற ரீதியிலும், இந்தியாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்டுள்ள முடிவை நாங்கள் மீளவும் வலியுறுத்துவோம். இருநாட்டு மீனவர்களும் கூட்டுத் தொழிலில் ஈடுபடலாம் என்ற முடிவுக்கு நாங்கள் ஒருநாளும் உடன்பாட்டுக்கு வரமாட்டோம்”, என்றார் ஜஸ்டின் சொய்சா.
இது பற்றி கருத்து வெளியிட்ட யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியான்பிள்ளை, கட்டுப்பாட்டுகளுக்கு உட்பட்டு இந்திய மீனவர்கள் கூட்டுத் தொழிலில் ஈடுபடுவார்களா என்பது சந்தேகமே என்று தெரிவித்தார்.
எல்லை தாண்டி மீன்பிடிப்பதற்கு வரக் கூடாது என்று கூறி, அவ்வாறு வருபவர்களைக் கைது செய்து சிறைச்சாலைகளில் அடைத்தும், நீதிமன்றங்களில் நிறுத்தியும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துகின்ற போதிலும், இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி வருவதை நிறுத்தவில்லை.
காரணம் எல்லை தாண்டி வந்து எங்கள் கடல் வளத்தை அழித்து பாரிய இலாபத்தை ஈட்டுவதில் இந்திய மீனவர்கள் பழகிப் போயிருக்கிறார்கள். இந்த நிலையில் அவர்கள் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு செயற்படுவார்கள் என்று சொல்ல முடியாது. இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு வரக் கூடாது என்பதே இதற்கு ஒரே தீர்வு என்பதே எங்கள் கருத்து´ என்றார் எமிலியான்பிள்ளை.
-பிபிசி தமிழ்-





