இந்திய கிரிக்கெட் அணியில் டோனி இல்லாவிட்டாலும், வலிமையானது தான் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக்.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வங்கதேசத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிகளில் காயம் காரணமாக டோனி பங்கேற்கவில்லை, அவருக்கு பதிலாக வீராட் கோலி அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறுகையில், ஆசிய கிண்ணப் போட்டியில் இருந்து டோனி விலகி இருப்பதன் மூலம் அவரது அனுபவத்தையும், தலைமைத்துவத்தையும் இந்திய அணி தவற விடுகிறது.
அதே நேரத்தில் அவருக்கு பதிலாக வீராட் கோலியை இந்திய அணியின் அணித்தலைவராக்கி இருப்பது பொருத்தமான தேர்வு.
டோனி இல்லாவிட்டாலும் இந்திய அணி தொடர்ந்து வலுவானதாகவே இருக்கிறது.
இந்தியா மட்டுமல்ல, ஆசிய கிண்ணப் போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் சவாலானவை என்று நான் மீண்டும் மீண்டும் சொல்லி வருகிறேன்.
தென்னாபிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய நாங்கள் அதே வெற்றி வேட்கையுடன் ஆசிய கிண்ணப் போட்டியில் பங்கேற்கிறோம். இந்திய அணியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.





