மகஸின் சிறையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழரின் இறுதிக்கிரியை வடமராட்சியில் : மனைவி,பிள்ளைகள் வருகை!!

1000

Gobynath

மகஸின் சிறைச்சாலையில் உயிரிழந்த பிரித்தானிய தமிழ் அரசியல் கைதியை இலங்கையிலேயே தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஸ்வலிங்கம் கோபிதாஸ் என்ற அவர் நேற்றைய தினம் மர்மமான முறையில் சிறைச்சாலையின் மலசலகூடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். எனினும் அவர் மாரடைப்பின் காரணமாகவே உயிரிழந்ததாக, சிறைச்சாலையின் வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது மனைவி, பிள்ளைகள் அடங்கலாக உறவினர்கள் அனைவரும் பிரித்தானியாவில் உள்ள நிலையில், அவரது சடலத்தை பிரித்தானியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

இன் நிலையில் அவரை உள்நாட்டிலேயே தகனம் செய்வதற்கு மகஸின் சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கோபிராஜின் உடல் இன்று யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது.

அவரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த இடமான வடமராட்சியில் இடம்பெறவுள்ளன.உயிரிழந்த கோபிராஜின் மனைவி, பிள்ளைகள் ஆகியோர் பிரிட்டனிலிருந்து நேற்றுக் கொழும்பு வந்தடைந்தனர்.

இந்த மரணம் தொடர்பில் தமக்குச் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் குற்றஞ் சுமத்துகின்றனர். கோபிதாஸின் சகோதரர் இது குறித்துக் குறிப்பிடுகையில்,

நீண்ட திட்டத்துடன் இதனைச் செய்துள்ளனர்.எமக்கு இது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இதற்கு முன்னரும் இவரைக் கொலை செய்ய இரண்டு தடவைகள் முயற்சி செய்தனர். அது வெற்றியளிக்கவில்லை. இதன் பின்புலத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொலை தொடர்பில் எமக்குச் சந்தேகம் இருக்கிறது.

கோபிதாஸின் தந்தை தெரிவிக்கையில்,

சம்பவம் அறிந்தவுடன் நான் அங்கு சென்றேன்.சிறைச்சாலை அதிகாரிகளின் பேச்சின் மூலம் எனது மகன் உயிரிழந்துள்ளதாக அறிந்து கொண்டேன். சுகயீனத்துக்கு மருந்தைக் கொண்டு போய்க் கொடுத்தாலும் அதிகாரிகள் அதனை எனது மகனிடம் வழங்க மாட்டார்கள். அவ்வாறான ஓர் அரசே இந்த நாட்டில் உள்ளது என்றார்.

இவரை விடுவிக்க தூதரகம் ஊடாக 7 வருடமாக முயற்சி செய்தேன். எனினும் இன்று எனது கணவரை இவர்கள் கொலை செய்துள்ளனர் என்றார் கோபிதாஸின் மனைவி.

தமது நாட்டுப் பிரஜை ஒருவரின் மரணம் தொடர்பில் தமக்குப் பதிவாகியுள்ளதாகவும், அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் பிரிட்டன் தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

கோபிராஜ் மாரடைப்பினாலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலில் எந்த அடிகாயங்களும் இல்லை என்றும் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் தம்மிடம் தெரிவித்தாக உறவினர்கள் தெரிவித்தனர்.

மகஸின் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை மலசலகூடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கோபிராஜின், உடற் கூற்றுப் பரிசோதனைகள் நேற்று மாலை இடம்பெற்றன.இதன் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.

பிரிட்டன் பிரஜையான விஸ்வலிங்கம் கோபிராஜ் (42) 2007ம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பிரிட்டனில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டிக் கைது செய்யப்பட்ட அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

2011ம் ஆண்டு வெலிக் கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் படுகாயமடைந்த கோபிராஜ், அதன் பின்னர் மகஸின் சிறைச் சாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருந்தார்.

அவரது உடலைப் பிரிட்டனுக்குக் கொண்டு செல்வதற்கு உறவினர்களால் முயற்சி எடுக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்றுக் காலை பிரிட்டனிலிருந்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.