ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிய இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றது. பங்களாதேஷ் சார்பில் தலைவர் முஷ்பிகியூர் ரஹீம் 117 ஓட்டங்களையும் அனமுல் ஹக் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இந்தியா சார்பில் மொஹமட் சமி 04 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு 280 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி விராத் கோலி மற்றும் ரஹானே ஆகியோரின் நிதானமான துடுப்பாட்டத்தால் 49 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 280 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
இந்திய அணி சார்பில் கோலி 136 ஓட்டங்களையும் ரஹானே 73 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். விராத் கோலி சிறப்பாட்டக்காரராக தெரிவுசெய்யப்பட்டார்.





