ஆசிகுளத்தில்…

வவுனியா ஆசிகுளம் பகுதியில் மக்களால் சேனைப் பயிற்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த 50 ஏக்கர் காணியை வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது,

வவுனியா ஆசிகுளம் பிலவு வீதியில் உள்ள சுமார் 50 ஏக்கர் காணியினை சேனைப் பயிற்செய்கைக்காக 50 குடும்பங்களுக்கு 1985 முதல் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு வரை அப்பகுதியில் நாம் சேனைப் பயிற் செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், யுத்தம் தீவிரமடைந்தமையால் சிலர் அப் பகுதியில் கொல்லப்பட்டும் காணாமல் போயும் இருந்தனர்.

இதனையடுத்து குறித்த காணிகளை கைவிட்டிருந்த நாம் யுத்தம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக துப்பரவு செய்து மீண்டும் சேனைப் பயிற்செய்கையில் ஈடுபட்டு வந்தோம்.

விவசாயத்தையே நம்பி வாழும் நாம் சேனைப் பயிற் செய்கை மூலம் பெறும் வருமானத்தைக் கொண்டே நமது நாளாந்த ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வந்தோம்.

சேனைப் பயிற் செய்கை முடிந்த பின்னர் மீண்டும் பற்றைகளாகும் குறித்த காணிகளை பயிற்செய்கைக் காலத்தில் மட்டும் நாம் பயன்படுத்தி வந்ததுடன், குறித்த பகுதிகளில் எமது பழைய கிணறுகளும் காணப்படுகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு குறித்த காணிகளுக்கான ஆவணம் கோரியும் வவுனியா பிரதேச செயலகத்தில் விண்ணப்பித்து இருந்தோம்.

இந்நிலையில் இம்முறை சேனைப் பயிற்செய்கைக்காக காணிகளை துப்பரவு செய்து பயிற்செய்கைக்கு தயாரான போது வனவளத் திணைக்களத்தினர் குறித்த காணிகள் தமக்கு சொந்தமானவை என கூறி எம்மை அதில் இருந்து வெளியேற்றுவதுடன் குறித்த காணிகளில் காட்டு மரங்களையும் நாட்டி விட்டு சென்றுள்ளனர்.

அத்துடன் எமது காணிகள், தோட்டங்கள் என்பவற்றுக்கு பயன்படுத்தும் வீதிகள் என்பவற்றிலும் காட்டு மரங்களை நாட்டியுள்ளனர். எனவே குறித்த காணிகளை எமது வாழ்வாதாரத்திற்காக வழங்குமாறு நாம் அரசாங்கத்திடம் உருக்காமாக கோரிகின்றோம் எனத் தெரிவித்தனர்.






